நிலவு கைக்கெட்டும் தூரத்தில் சந்திராயன்!
பெங்களூர்: நிலவின் இறுதிச் சுற்றுப்பாதையில் சந்திராயன் வெற்றிகரமாக விடப்பட்டுள்ளது. நாளை அதில் உள்ள மூன் இம்பாக்ட் புரோப் (moon impact probe), நிலவின் தரைப் பரப்பில் இறங்கி, இந்திய தேசியக் கொடியை நடுகிறது.
நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தியாவின் சந்திராயன்-1 விண்கலம், சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இஸ்ரோ வரலாற்றிலேயே மிக அதிக உயரத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலம் என்ற பெருமையைப் பெற்றுள்ள சந்திராயன்-1க்கும், நிலவுக்கும் இடையிலான தூரம் நேற்று மேலும் குறைக்கப்பட்டு இறுதிச் சுற்றுப் பாதையில் விடப்பட்டது.
இந்தப் பணியை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் டெலிமெட்ரிக், டிராக்கிங் கண்காணிப்பு மையம் மேற்கொண்டது.
நிலவிலிருந்து 200 கிலோமீட்டர் உயரத்தில் இருந்த சந்திராயனை, நேற்று விஞ்ஞானிகள், 100 கிலோமீட்டர் உயரத்திற்கு குறைத்து இறுதி சுற்றுப்பாதையில் விட்டனர்.
440 நியூட்டன் திரவ என்ஜினை இயக்கி இந்த பணி முடிக்கப்பட்டது. இதன் மூலம் திட்டமிட்ட சுற்றுப் பாதைக்கு சந்திராயன் வந்து விட்டது. தற்போது நிலவை சந்திராயன் சுற்றி வர ஆகும் காலம் 2 மணி நேரமாக
குறைந்துள்ளது.
இங்கிருந்தபடியே நிலவு குறித்த ஆய்வுகளை இனி சந்திராயன் மேற்கொள்ளும். இதற்காக சந்திராயனுடன் இணைக்கப்பட்டுள்ள 11 உபகரணங்களும் இனி செயல்படத் தொடங்கும். ஏற்கனவே டெரைன் மேப்பிங் கேமராவும், ரேடியேஷன் டோஸ் மானிட்டரும் செயல்படத் தொடங்கி விட்டன.
அடுத்த கட்டமாக சந்திராயனில் உள்ள மூன் இம்பாக்ட் புரோப், கருவி, சந்திரனின் தரைப்பரப்பில் இறங்கவுள்ளது. இதுதான் மிகப் பெரிய நிகழ்வாகும். இந்தியாவின் தேசியக் கொடியும் நிலவில் நாட்டப்படும். இந்த நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications