காவல்துறையின் இதயம் கெட்டுவிட்டது-சட்டமன்றத்தில் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டக் கல்லூரி மோதலை தடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கோரிக்கை வைத்தன.

சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மோதல் தொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. அதில் உறுப்பினர்கள் பேசியதாவது:

ஜெயக்குமார் (அதிமுக):

கலவரம் நடக்கும் பகுதிகளை முன்கூட்டியே அறிந்து இது போன்ற கலவரங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது போலீசாரின் கடமை. ஆனால், 50க்கும் மேற்பட்ட போலீசார் 10 அடி தூரத்தில் நின்று சினிமா பார்ப்பது போல அந்த சண்டையைப் பார்த்தது வேதனை அளிக்கிறது. வேடிக்கை பார்த்த அனைத்து போலீசாரையும் கூண்டோடு பணி நீக்கம் செய்ய வேண்டும். தவறு செய்த ஒரு அதிகாரியையும் விடாமல் நீக்க வேண்டும். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஞானசேகரன் (காங்):

சட்டக் கல்லூரியில் கடந்த 10 நாட்களாகவே புகைச்சல் நடந்து கொண்டுள்ளது. இது போலீசுக்கும் கல்லூரி முதல்வருக்கும் தெரியும். தெரிந்திருந்தே இந்தத் தாக்குதல் நடந்தது என்பதை ஜீரணிக்க முடியவில்லை. போலீசாரை மட்டும் நீக்கினால் போதாது, கமிஷ்னர் மட்டத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன் (பாமக):

கண்ணீர் புகை குண்டு வீசியிருந்தாலோ அல்லது வானத்தை நோக்கி சுட்டிருந்தாலோ கூட அந்தக் கும்பல் ஓடியிருக்கும். அருகிலேயே காவல் நிலையங்கள் வேறு இருக்கின்றன. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வேறு எங்குமே படிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும்.

மகேந்திரன் (மார்க்சிஸ்ட்):

மனித நேயம் கொஞ்சமாவது இருக்கும் யாருமே வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல் இது. காலையிலேயே மாணவர்கள் ஆயுதங்களுடன் கல்லூரிக்குள் சென்றதாக தகவல் வந்திருக்கிறது. ஆனால் இது தெரிந்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் வராததால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருக்கின்றனர். முன்பு சட்டக் கல்லூரி விடுதிக்குள் நுழைந்து தடியடி நடத்தினார்களே.. அப்போது யார் புகார் தந்தது?. அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் ஜாதிரீதியான பிளவை ஏற்படுத்த ஜாதிய சக்திகள் முயல்கின்றன. இந்த சக்திகளை அடக்கி ஒடுக்க வேண்டும்.

சிவுபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்):

முன்கூட்டியே மோதல் வரலாம் என்று தெரிந்ததால் பாதுகாப்புக்குச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், மோதல் வந்தபோது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டதாக முன்பு முதல்வர் கருணாநிதியே கூறினார். நான் சொல்கிறேன், ஈரல் மட்டுமல்ல இதயமே கெட்டுவிட்டது.

ராமகிருஷ்ணன் (மதிமுக):

ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார். அவள் உதவி கேட்டு கதறுகிறாள். அப்போது அருகில் இருக்கும் போலீஸ்காரர், எனக்கு நடவடிக்கை எடுக்க அனுமதி இல்லை என்று கூறுவது போல இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த மோதல் பிற கல்லூரிகளுக்கும் பரவலாம். எச்சரிக்கையாக இருந்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+