கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானின் உதவியாளர் உள்பட 2 பேர் சுட்டுக் கொலை
கொழும்பு: இலங்கையின் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானின் உதவியாளர் குமாரசாமி நந்தகோபன் என்கிற ரகு உள்ளிட்ட 2 பேர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கருணாவின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆசாத் மெளலானாவின் காரில் பயணித்தபோது அடையாளம் தெரியாத நபர்கள், ரகு மற்றும் சமீர் ராஜ்குமார் ஆகியோரை சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றனர்.
நுகேகோடாவில் உள்ள ஒருவலா என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா பிரிந்து வந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தொடங்கினார். அரசுப் படையுடன் இணைந்து அவர் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் போலி பாஸ்போர்ட்டில் லண்டன் சென்று கைதானார். அவர் லண்டனுக்குச் சென்ற பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் பிள்ளையான் வசம் வந்தது. இதனால் கருணா அதிருப்தி அடைந்தார்.
அவர் சிறையிலிருந்து மீண்டு இலங்கை திரும்பியபோது கட்சி பிள்ளையான் வசம் முழுமையாக போய் விட்டது.
இந்த நிலையில், பிள்ளையானின் தீவிர ஆதரவாளரும், அவரது உதவியாளருமாக இருந்து வந்த ரகுவுக்கும், கருணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
ரகுவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என கருணா கூறி வந்தார். இந்த நிலையில்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம், அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டபோது, அந்தக் கட்சியின் தலைவராக இருந்தார் ரகு. பின்னர் அவர் ஆஸ்திரேலியா போய் விட்டார்.
மீண்டு் கொழும்பு திரும்பிய அவர் பிள்ளையானுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
கருணா, பிள்ளையானுக்கு இடையே நடக்கும் பனிப்போரின் விளைவாகவே ரகு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications