இன்று ஆந்திராவில் கரையை கடக்கும் புயல்-தமிழகத்திலும் கடல் சீற்றம்

கைமுக்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் நேற்றிரவு வங்கக் கடலில் ஆந்திராவின் தென் கிழக்குப் பகுதியில் 270 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் சின்னம் ஆந்திரா கடற் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந் நிலையில் இந்தப் புயல் ஆந்திராவில் இன்று கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்,
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து 270 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது மேலும் வலுவடைந்து இன்று மாலையில் பாபட்லா-காக்கி நாடா இடையே மசூலிப்பட்டினத்தில் கரையை கடக்கும்.
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு ஆந்திராவின் கடற்கரை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பலத்த கடல்காற்று வீசும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையில் இன்று காலை பலத்த காற்று வீசியது.
எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம் ஆகிய இடங்களில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. கடல்சீற்றம் காரணமாக திருவொற்றியூர்- எண்ணூர் பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கடலோரத்தில் இருந்த வீடுகள் இடிந்தன.
கடல் கொந்தளிப்பு காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
காசிமேடு அண்ணாநகரில் சீறி வந்த அலைகள் கடற்கரையில் இருந்த கங்கை அம்மன் கோவில் மற்றும் இரு வீடுகள் மீது படுவேகத்தில் மோதியது. இதில் கோவில் மற்றும் வீடுகள் தரைமட்டமாயின.
அதே போல புதுவையிலும் கடலூரிலும் கடல் கொந்தளிப்பு மிக அதிகமாக உள்ளது. புதுச்சேரி பூரணாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் தேங்காய்திட்டு முகத்துவாரம் அருகே வந்தபோது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது.
இதில் 4 மீனவர்கள் கடலில் விழுந்தனர். இதில் 3 பேர் நீந்தி கரை சேர்ந்துவிட்டனர். ஜீவரத்தினம் என்பவர் கரை திரும்பவில்லை. அவரைத் தேடும் பணி நடக்கிறது.
காரைக்காலிலும் கடல் சீற்றம் ஏற்பட்டு கடலோரப் பகுகளில் நீர் புகுந்துள்ளது.
அதே போல ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலும் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. பாம்பன் துறைமுகத்திலும் நாகப்பட்டிணம் துறைமுகத்திலும் கடலூர் துறைமுகத்திலும் புயல் எச்சரிக்கை சின்னம் எண்-1 ஏற்றப்பட்டுள்ளது.
வேதாரண்யம் கடல் பகுதியிலும் கடல்சீற்றம் அதிகமாக உள்ளது.
இந்தப் புயல் குறித்த உடனடி விவரங்கள் இந்திய வானிலை ஆய்வு மைய இணைய தளத்தில். அதன் முகவரி:
http://www.imd.gov.in/section/nhac/dynamic/cyclone.htm












Click it and Unblock the Notifications