உசிலம்பட்டி பகுதியில் பஸ்கள் மீது தொடர் தாக்குதல்
உசிலம்பட்டி: சென்னை சட்டக் கல்லூரியில் ஒரு பிரிவு மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பஸ்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தென் மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மதுரையில் அரசு பஸ் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டதோடு பல பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று வரை 17 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் லத்தில் இருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற அரசு பஸ் மீது திருமங்கலம் விலக்கு அருகே மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் கல் வீசிவிட்டுத் தப்பினர். இதில் அரசு பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து டிரைவர் படுகாயமடைந்தார்.
அதே போல் மதுரையில் இருந்து தேனி சென்ற தனியார் பஸ் மீதும் சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் டிரைவர் உள்பட சில பயணிகளும் காயமடைந்தனர்.
எஸ்.பாப்புநாயக்கன் பட்டியில் இருந்து உசிலம்பட்டி சென்ற அரசு டவுன் பஸ்சும் தாக்குதலுக்குள்ளானது. அதே போல டி.ராமநாதபுரத்தில் இருந்து உசிலம்பட்டி சென்ற டவுன் பஸ் மீதும், எழுமலையில் இருந்து உசிலம்பட்டி சென்ற பஸ்கள் மீதும் தாக்குதல் நடந்தது.
இந்த சம்பவங்களில் காயமடைந்த பயணிகளும் டிரைவர்களும்மதுரை, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களால் இந்தப் பகுதியில் பஸ்கள் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. இரவு நேர பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்த கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக குப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட மாதரை கிராமத்தினர் இன்றும் மறியல் செய்ய திரண்டு வந்தனர். அவர்களிடம் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தார்.


Click it and Unblock the Notifications
