'பழிக்குப் பழி'-தலையில் கல்லை போட்டு கொலை
நெல்லை: பஞ்சாயத்துத் தலைவரைக் கொன்றவர் தலையில் கல்லைப் போட்டுக் கொல்லப்பட்டார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள சிறுக்கன்குறிச்சையை சேர்ந்தவர் சாமிபாண்டியன். சிறுக்கன்குறிச்சி பஞ் தலைவராக இருந்த இவரை கடந்த 1996ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த பட்டு என்பவர் வெட்டிக் கொலை செய்தார்.
ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி பட்டுவை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வந்த பட்டு தலைமறைவாகி விட்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக போலீஸ் பிடியில் சிக்காமல் வெளியூர் வசித்து வந்த பட்டு நேற்று மீண்டும் ஊருக்கு வந்தார்.
இதையறிந்த சாமிபாண்டியின் மகன் வள்ளிதுரை என்பவர் தனது தந்தையின் கொலைக்கு பழிக்கு பழிவாங்க திட்டமிட்டார்.
அதே ஊரை சேர்ந்த உறவினர்கள் பரமசிவன் மகன் குமார், செல்லக்குட்டி மகன் முருகன் ஆகியோரை அழைத்துக் கொண்டு பட்டுவை தேடினார். அவர் அங்குள்ள சுடலைமாடன் கோயில் மரத்தடியில் படுத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வள்ளிதுரை உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அருகில் கிடந்த கல்லை தூக்கி பட்டுவின் தலையில் போட்டனர். இதில் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அதன்பிறகு அவர்கள் தப்பியோடி விட்டனர்.
தகவல் அறிந்ததும் நெல்லை எஸ்பி ஆஸ்ரா கார்க், ஆலங்குளம் டிஎஸ்பி கிங்ஸ்லின் மற்றும் போலீசார் வந்து பட்டுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தலைமறைவாக உள்ள வள்ளிதுரை உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications