சட்டக் கல்லூரி விவகாரம்: கமிஷனருடன் திருமா. திடீர் சந்திப்பு
சென்னை: சட்டக் கல்லூரி மாணவர் வன்முறை தொடர்பாக காவல்துறையினர் ஒரு தலைபட்சமான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணனை திடீரென சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டக் கல்லூரி மாணவர் பிரச்சனையில் சம்பந்தப்படாத சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்களுடைய பெற்றோர்களிடம் சென்று விசாரணை நடத்துகின்றனர். இது தொடர்பாகவே கமிஷனரை சந்தித்து பேசினோம்.
பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தலைபட்சமான நடவடிக்கை கூடாது. நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளோம்.
இந்த பிரச்சனை குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விசாரித்த நீதிபதியாவார்.
அதற்கு பதிலாக தற்போது பணியில் உள்ள நீதிபதிகள் குழுவை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இதனை தமிழக அரசுக்கு எங்களுடைய வேண்டுகோளாக தெரிவித்துக்கொள்கிறோம்.
மாணவர் கலவரம் தொடர்பான காட்சிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவது சரியல்ல. அப்படி செய்வதில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாக சந்தேகம் எழுகிறது என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications