தீர்வு: புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு ராஜபக்சே அழைப்பு
கொழும்பு: இனப் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பது தொடர்பாக பேச வருமாறு விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கூறுகையில், விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் முறிந்த நிலையிலும் கூட, அரசியல் தீர்வை நோக்கியே இலங்கை அரசு செல்கிறது.
அரசியல் ரீதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வருமாறு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டணிக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கமிட்டித் தலைவர் திஸவிதரனா சமர்ப்பித்த இடைக்காலத் திட்டங்களை கடந்த ஜனவரி மாதம் அதிபர் ஏற்றுக் கொண்டார். உடனடியாக அமலுக்கும் கொண்டு வந்தார்.
இதன் காரணமாகத்தான் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதல்வராக அமர முடிந்தது. மக்களின் கையில் அங்கு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை ஒடுக்கும் பணியில்தான் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அரசியல் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியிலேயே தீர்வு காண முடியும் என்பதை சர்வதேச சமுதாயத்திற்கு அதிபர் ராஜபக்சே மீண்டும் உறுதியோடு கூறியுள்ளார். அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை அமலுக்கு கொண்டு வருவதில் அரசு உறுதியுடன் உள்ளது.
இந்தியாவுடன் இலங்கைககு நெருக்கமான உறவு உள்ளது. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாடுகளின் உயர் மட்டத் தலைவர்களும் பரஸ்பரம் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications