தயாநிதி மாறனை நீக்குவதற்காக வீண் பழி சுமத்த வேண்டாம்: கலாநிதி மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாநிதி மாறனை திமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் எங்கள் மீது வீண்பழி சுமத்த வேண்டாம். தயாநிதி மாறன் விலக வேண்டும் என திமுக விரும்பினால், அவரே கட்சியிலிருந்து விலகி விடுவார் என முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

திமுக ஏடான முரசொலியில், முதல்வர் கருணாநிதி, தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில், சன் டிவி அதிபர் கலாநிதி மாறனையும், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் விமர்சித்திருந்தார்.

இதையடுத்து இன்று மாலை தயாநிதி மாறன் செய்தியாளர்கள் கூட்டத்தை கூட்டி முதல்வரின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

ஒன்றரை வருடம் அமைதி காத்தோம்

செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் அமைதியாக இருந்து வருகிறோம். ஆனால் எங்களது நிலையை விளக்கியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம்.

முதல்வர் கருணாநிதி சுமத்தியுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களுக்கும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலை, பாயிண்ட் பை பாயிண்ட்டாக அளித்து, 12 பக்க கடிதம் ஒன்றை எனது சகோதரர் கலாநிதி மாறன், முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளார் (கடித நகலைக் காட்டினார்).

இது முதல்வர் கருணாநிதிக்கு நாங்கள் அனுப்பிய பதிலோ அல்லது அவரது புகார்களுக்கு எதிரான புகார் கடிதமோ அல்ல. மாறன் குடும்பத்தினரின் தன்னிலை விளக்கமே இது என்றார் தயாநிதி மாறன்.

ஒருபோதும் அவமதிக்கவில்லை ..

அந்தக் கடிதத்தில், கலாநிதி மாறன் எழுதியிருப்பதாவது:

உங்களுடன் இருக்கும் சிலர் கொடுக்கும் பொய்யான தகவல்களின் பேரில், இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளீர்கள்.

எங்களது தந்தை முரசொலி மாறன் மறைவுக்குப் பின்னர் திமுகவுக்கோ அல்லது உங்களது குடும்பத்தினருக்கோ அவமரியாதை ஏற்படும் வகையில் நாங்கள் ஒருபோதும் நடந்து கொள்ளவே இல்லை.

மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புகள், ஒரு சர்வதேச நிறுவனத்தால் நடத்தப்பட்டது.

இதேபோன்ற கருத்துக் கணிப்புள் பல்வேறு ஆங்கில நாளிதழ்களிலும் வெளியாகின. அந்தக் கருத்துக் கணிப்புகளில் தயாநிதி மாறன் சிறந்த அமைச்சர் என்று தெரிவிக்கப்பட்டபோது அவரை அழைத்து நீங்கள் பாராட்டினீர்கள். அந்த ஆங்கில செய்தியின் தமிழாக்கத்தை முரசொலியில் பிரசுரிக்க செய்தீர்கள்.

தினகரன் நாளிதழும் அதே போன்ற ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டபோது, அதற்கு அரசியல் நிறம் கொடுக்கப்பட்டது. கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயல்வதாக மாறன் குடும்பத்தினர் மீது வீண் பழி சுமத்தப்பட்டது.

அதேபோல, உங்களது அரசியல் வாரிசாக மு.க.ஸ்டாலினை கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டதை பிரசுரித்தபோது, மதுரையில் வன்முறை வெடித்தது. சிலர் அரசுப் பேருந்துகளை தாக்கினர்.

சென்னையிலிருந்து போன உத்தரவு

அப்போதுதான் சென்னையிலிருந்து சிலர் மதுரைக்குத் தொடர்பு கொண்டு, பஸ்களைத் தாக்குவதை விட தினகரனை குறி வையுங்கள் என்று அறிவுரை கூறினர்.

இது எந்தளவுக்கு உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த தாக்குதலால் 3 உயிர்கள் பலியாக நேரிட்டது.

மிசாவில் கைதாகி சிறை சென்ற, பல ஆண்டுகளாக கட்சிக்காக பாடுபட்டு வரும் மு.க.ஸ்டாலினுக்கு கருத்துக் கணிப்பில் முதலிடம் கிடைத்ததற்காக நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் ஏதோ பெரும் குற்றம் இழைத்து விட்டது போல பார்க்கப்பட்டோம்.

தயாநிதி மாறன் பலிகடாவாக்கப்பட்டார்

தினகரனில் வெளியான கருத்துக் கணிப்புக்காக தயாநிதி மாறன் பலிகடாவாக்கப்பட்டது கொஞ்சம் கூட நியாயமில்லை.

தயாநிதி மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்க விரும்புவதாக கூறியிருந்தால், உடனடியாக தயாநிதி மாறன் தானாகவே ராஜினாமா கடிதத்தை கொடுத்திருப்பார். ஆனால் அதை விடுத்து, அவரை மிகப் பெரிய குற்றவாளி போல சித்தரித்து, அவரிடம் எந்த விளக்கத்தையும் கேட்காமல் திமுகவின் நிர்வாகக் குழு கூடி தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.

ஆனால், தினகரன் மீதான தாக்குதலைக் கண்டித்தோ அல்லது அந்த சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பேருக்கு இரங்கல் தெரிவித்தோ, திமுக நிர்வாகக் குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை.

கண்ணியம் காத்தார் தயாநிதி

அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் கூட, திமுக தலைமைக்கு எதிராக தயாநிதி மாறன் எந்தவித அறிக்கையும் வெளியிடாமல், பேசாமல், கண்ணியத்துடன் நடந்து கொண்டார்.

கருத்துக் கணிப்புகளுக்குப் பிறகுதான் எங்களுக்கு அனைத்து முனைகளிலிருந்தும் தாக்குதல்கள் வந்தன. சன் டிவி கட்டமைப்பையே நசுக்கவும் முயன்றனர்.

இதில் பல தகவல்கள் உங்களது கவனத்திற்கே வரவில்லை அல்லது கொண்டு வரப்படவில்லை.

கலைஞர் டிவி ஆரம்பிக்கப்பட்டபோது, சன் டிவியிலிருந்து 250 பேரை அங்கு கொண்டு போய் விட்டனர். கலைஞர் டிவியில் சேர இந்த ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்திருந்தாலும் கூட அதை எப்படி கலைஞர் டிவி ஏற்றிருக்கலாம்?. இது நியாயமா?.

இன்றும் சன் நம்பர் ஒன் ..

அதன் பின்னர் மாநிலத்தின் பல பகுதிகளில், கலைஞர் டிவியை வளர்ப்பதற்காக சன் டிவியின் கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மதுரையில் சன் டிவி சுத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால் தமிழக மக்களின் ஆதரவோடு, நம்பர் ஒன் சானலாக இன்றும் சன் டிவி விளங்கி வருகிறது.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை விட்டு சன் டிவி காலி செய்ய மாட்டேன் என்று கூறியதாக கூறிய புகாரை நாங்கள் மறுக்கிறோம். நாங்கள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டோம் என்பதற்காகவே எங்களை காலி செய்ய நிர்ப்பந்தித்தார்கள்.

உண்மையில், ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தொடர்பாக, அமைச்சர் ராஜா குறித்த செய்திகளும், மின்வெட்டு தொடர்பான ஆற்காடு வீராசாமி குறித்த செய்திகளும், நாங்கள் அண்ணா அறிவாலயத்தை விட்டு வெளியேறிய பின்னர்தான் வரத் தொடங்கின.

மேலும், ராஜா குறித்தும், ஆற்காடு வீராசாமி குறித்தும் நாங்கள் மட்டும் செய்தி வெளியிடவி்லை. மாறாக அனைத்து ஏடுகளும்தான் இதுகுறித்த செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

நல்ல நிலையில் ஒப்படைத்தோம் ..

அண்ணா அறிவாலயத்தை நாங்கள் காலி செய்து விட்டு வந்தபோது, அதை நல்ல நிலையில்தான் ஒப்படைத்து விட்டு வந்தோம்.

பல கோடி ரூபாய் செலவில் சன் டிவிக்காக நாங்கள் அமைத்த உள் அலங்காரங்களை அப்படியே விட்டு விட்டு வந்தோம். இடத்தைக் காலி செய்து விட்டு சாவியை ஒப்படைக்கும்போது அறிவாலய மேலாளரிடம் முழுமையாக சுற்றிக் காட்டி, அவரும், நல்ல நிலையில் அனத்தும் இருப்பதாக தெரிவித்தார்.

அண்ணா அறிவாலயத்திற்கு சன் டிவி வந்த பின்னர், முதல்வர் அறை உள்ளிட்ட பல பகுதிகளை சீரமைத்து, புதுப்பித்துக் கொடுத்தோம். வெற்றிச்செல்வி அன்பழகன் கண் மருத்துவமனையையும் நாங்கள் சீரமைத்துக் கொடு்ததோம். இதை அறிந்து தாங்களே எங்களை அழைத்துப் பாராட்டினீர்கள்.

தயாநிதி விலகத் தயார்

தயாநிதி மாறனை திமுகவிலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காக, மீண்டும் மீண்டும் அவர் மீது வீண் பழி சுமத்த வேண்டாம். தயாநிதி மாறன் விலக வேண்டும் என்று விரும்பினால் உடனடியாக திமுகவிலிருந்து அவர் விலகத் தயாராகவே இருக்கிறார் என்று கூறியுள்ளார் கலாநிதி மாறன்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+