சென்னை அருகே அய்யப்ப பக்தர் கோவிலில் கொலை
பொன்னேரி: சென்னை அருகே சோழவரத்தில், கோவிலில் படுத்துத் தூங்கிய அய்யப்ப பக்தர் வெட்டிக் கொல்லப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையைச் சேர்ந்தவர் ஆனந்த செட்டியார். இவருக்கு திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்துள்ள பண்டிகவனூரில், 150 ஏக்கர் நிலத்தில் பண்ணை வீடு உள்ளது. அங்கு விநாயகர் கோவில் ஒன்றும் உள்ளது.
இந்தக் கோவிலின் அருகே தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (65) என்பவர் வசித்து வந்தார். தனது 2வது மனைவி கிருஷ்ணவேணி, 2 மகன்கள், 2 மகள்களுடன் இங்கு வசித்து வந்தார் கிருஷ்ணன்.
சபரிமலைக்கு மாலை போட்டிருந்த கிருஷ்ணன், விநாயகர் கோவிலில் இரவு தூங்குவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவும் அதேபோல கோவிலில் படுத்துத் தூங்கினார். இந்த நிலையில் நேற்று காலை கோவில் வராண்டாவில் அவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
அவரது உடலில் 3 இடங்களில் வெட்டுக் காயம் காணப்பட்டது. கம்பியால் குத்தியும், அடித்தும் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு அருகிலேயே இரும்புக் கம்பி ஒன்றும் கிடந்தது.
கோவிலில் கொள்ளை எதுவும் போகவில்லை. எனவே முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ தினத்தன்று கோவில் காவலாளி சந்திரன், கிருஷ்ணனுடன் தங்கியிருந்ததாக தெரிகிறது. அவர்களுக்குள் மோதல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே சந்திரனைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications