For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காற்றழுத்த தாழ்வுநிலை நகர்கிறது-மழை தொடர்கிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் மத்திய, தென் மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்ககடலில் நிலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

புதுச்சேரி, கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது.

தொடர் மழையால் சிதம்பரம் அருகே சிதம்பரநாதன் பேட்டையில் நபார்டு வங்கி- கிராமப்புற நெடுஞ்சாலை துறை இணைந்து ரூ.85 லட்சம் செலவில் கான்சாகிப் வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்ட இணைப்பு பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள தெற்கு பிச்சாவரம், தாண்டவராயன் உள்பட 20 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிதம்பரத்துக்கு செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

புதுவையில் மழைக்கு 2 பேர் பலி:

புதுச்சேரி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழைக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். 3 பேர் காயமடைந்துள்ளனர். நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் பேரம்பை என்ற இடத்தில் வள்ளி என்ற பெண் வீட்டுச் சுற்றுச்சுவர் இடிந்து பலியானார்.

அதேபோல, மழையில் குடையுடன் நடந்து சென்றவர், அறுந்து தொங்கிய மின் கம்பியில் குடைக் கம்பி பட்டதில் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

ரெட்டியார்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் 3 பேர் காயமடைந்தனர். மீனவர்கள் யாரும் இன்றும் கடலுக்குப் போகவில்லை.

ஆனால் 2 பேர் பைபர் கிளாஸ் படகில் கடலுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் கடுமையான கடல் கொந்தளிப்பில் படகு மூழ்கியது. டனடியாக விரைந்த சக மீனவர்கள் இருவரையும் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சித்தேரி, மணப்பேட்டை உள்ளிட்ட பல ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

புதுச்சேரியில் பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. பல சுரங்கப் பாதைகளும் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.

தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணை நிரம்புகிறது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் சாத்தனூர் அணை நிரம்பி வருகிறது. அணையின் நீர் மட்டம் 111.05 அடியாக உயர்ந்து உள்ளது.

சாத்தனூர் அணையில் 90 அடி அளவிற்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே விவசாயத்திற்கு திறந்து விடப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சாத்தனூர் அணை நிரம்பாததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. தற்போது விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் அணையில் இருப்பதால் வருகிற ஜனவரி மாதம் முதல் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். எனவே சாத்தனூர் அணை தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ அறிவித்தார்.

இதே போல தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வீராணம் ஏரி நிரம்பியது:

வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம், அரியலூர், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வடவாறு வழியாக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வருகிறது. ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 44.5 அடியாக இருந்தது.

ஏற்கனவே ஏரியின் நீர்மட்டத்தை 44.5 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால், சேத்தியாதோப்பு வி.என்.எஸ். மதகு மூலம் வினாடிக்கு 500 கன அடி தண்ணீரை பொதுப்பணித்துறை வெளியேற்றி வருகிறது. சென்னைக்கு வழக்கம் போல் 76 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

நெய்வேலியில் மின் உற்பத்தி பாதிப்பு:

நெய்வேலியில் பலத்த மழை காரணமாக பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கவும், கன்வேயர் பெல்ட் மூலம் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி அனுப்புவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 அனல் மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

முதல் அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட்டுக்கு பதில் தற்போது 300 மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது. 1-வது விரிவாக்க அனல் மின் நிலையத்தில் 400 மெகா வாட்டுக்கு பதில் 200 மெகா வாட்டும், 2-வது அனல் மின் நிலையத்தில் 1470 மெகா வாட்டுக்கு பதில் 800 மெகா வாட்டும்தான் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மொத்தத்தில் மழை காரணமாக 1190 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக என்.எல்.சி நிர்வாக மின்சார துறை இயக்குனர் சேதுராமன் தெரிவித்தார்.

ராமேஸ்வரம்:

நேற்று 2வது நாளாக பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. பாம்பன் ரயில் பாலத்தை தொட்டுச் செல்லுமளவு உயர்ந்தன அலைகள். கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள் அலையிலும், காற்றிலும் சிக்கி கரைக்கு இழுத்துச் செல்லப்பட்டன.

தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் சாலைவரை கடல் நீர் வந்து மோதுகிறது. இதனால் தனுஷ்கோடிக்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் வேன், பஸ்கள் செல்ல முடியவில்லை. ராமேஸ்வரத்தில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவடங்களில் 4-வது நாளாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,

வங்க கடலில் தமிழ்நாடு-ஆந்திரா கடலோரப் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை 3 நாட்களுக்கு பிறகு தற்போது லேசாக நகர்ந்துள்ளது. குமரி முனையில் இருந்து தமிழக கடலோரத்தில் இலங்கையின் குறுக்கே இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிக்கிறது.

இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும், உள் மாவட்டங்களில் அனேக பகுதிகளிலும் கன மழை பெய்யும். காற்று பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X