தென்மாவட்ட அணைகள் வேகமாய் நிரம்புகின்றன!
நெல்லை: தற்போது பெய்து வரும் கன மழையால் நெல்லை, குமரி மாவட்ட அணைகள் நிரம்பி வருகின்றன.
தென் மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி நிரம்பிவிட்டன.
குமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நேற்று காலையில் திறந்து விடப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக மழை நீடித்தது. பாபநாசம் மற்றும் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வருகின்றன.
நேற்று பாபநாசம் அணையில் நீர் மட்டம் 116.25 அடியாகவும், சேர்வலாறு அணையில் 129.92 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 82 அடியாகவும், கடனாநதி அணையில் 81.10 அடியாகவும், ராமநதி அணையில் 66 அடியாகவும், கருப்பா நதி அணையில் 67.26 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையில் 23.50 அடியாகவும், அடவிநயினார் அணையில் 113.25 அடியாகவும், நம்பியாறு அணையில் 21 அடியாகவும், கொடுமுடியாறு அணையில் 35 அடியாகவும் இருந்தது. குண்டாறு அதன் முழு கொள்ளளவை எட்டி (36.10 அடி) நிரம்பி வழிகிறது.
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 2-வது நாளாக நேற்று 2 ஆயிரத்து 350 கன அடி தண்ணீர் கடலுக்கு திறந்துவிடப்பட்டது.
குற்றாலம்
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
குற்றாலம் அருவியில் நேற்று காலையில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications