மாறிய பிணங்கள்: ஒன்று எரிப்பு-உறவினர்கள் தவிப்பு
சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் இரு பிணங்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டன. அதில் ஒரு பிணம் உடனடியாக எரிக்கப்பட்டு விட்டதால் அந்தப் பிணத்துக்குரியவரின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் நெமந்தபுரத்தை சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி (45). இவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
உடலைப் பெற அவரது மகன் ராஜ்குமார் பிரேதப் பரிசோதனை அறைக்குச் சென்றார். அங்குள்ள ஊழியர்கள் வேலூர் போலீசார் வந்த பிறகே உடலை தர முடியும் என்று கூறிவிட்டனர்.
இந் நிலையில், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த, மேற்கு வங்காளத்தை சேர்ந்த தபஸ்கான் (39) என்பவர் நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவரின் உடலை பெற்றுக் கொள்ள அவரது உறவினர்கள் பிரேத பரிசோதனை அறைக்கு நேற்று காலை 8 மணிக்கு வந்தனர். அவர்களிடம் பிரேத பரிசோதனை அலுவலர் உடலை ஒப்படைத்தார். உறவினர்கள் உடலை எடுத்து சென்றனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் வேலூர் போலீசாருடன் பிரேத பரிசோதனை அறைக்கு உடலை வாங்க வந்தனர். உடலை எடுத்து செல்ல பிரேத பரிசோதனை அலுவலர் டில்லிபாபு அனுமதி வழங்கினார்.
ஆனால், பிரேத பரிசோதனை அறையில் கிருஷ்ணமூர்த்தியின் உடல் இல்லை. மாறாக வேறு ஒருவரின் உடல் தான் இருந்தது.
கிருஷ்ணமூர்த்தியின் உடலை மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் தபஸ்கான் உடல் என்று நினைத்து, எடுத்துச் சென்றது தெரியவந்தது. பிரேத அறையில் தபஸ்கானின் உடல் தான் இருந்தது.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் டீன் கலாநிதியிடம் புகார் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள், கிருஷ்ணமூர்த்தியின் உடலை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் எரித்துவிட்டனர்.
இதனால் செய்வதறியாமல் திகைத்த சென்னை மருத்துவமனை நிர்வாகம், கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்களிடம் சமாதானப்பேச்சு நடத்தினர். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து கிருஷ்ணமூர்த்தியின் உடலை தரும்படி கூச்சலிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.
டில்லிபாபு சஸ்பெண்ட்:
மருத்துவமனை டீன் கலாநிதி கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் வருத்தத்திற்குரியது. ஊழியர்களின் கவனகுறைவால் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த மூத்த டாக்டர்களை கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக அங்கிருந்த ஊழியர் டில்லிபாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றார்.
அலட்சிய டில்லிபாபு:
பிரேத பரிசோதனை அறையில் இருக்கும் அலுவலர் டில்லிபாபு சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார். இதன் காரணமாக அவர், பிரேத பரிசோதனை அறையில் உள்ள பிணங்களை பார்க்காமல், இறந்தவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்ட சொல்லிய பிறகு, அனுமதி வழங்கி வந்தாகக் கூறப்படுகிறது.
அரசு மருத்துவனையில் இப்படி பிணங்கள் மாறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒரு முறை இப்படி குழப்பியுள்ளனர்.
2 மாதங்களுக்கு முன் மரணம் அடைந்த திருநெல்வேலியை சேர்ந்த ஒருவரின் உடல் மாற்றப்பட்டு வேறு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்த சம்பவம் பற்றி உடனே தெரிந்ததால், மாற்றப்பட்ட பிணம் செங்கல்பட்டில் மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிருடன் இருக்கும்போது சிகிச்சை தொடர்பாக அரசு மருத்துவமனையில் ஏகப்பட்ட குழப்பங்கள் செய்வதாக ஏற்கனவே சர்ச்சைகள் உள்ளன. இந்த நிலையில், இறந்த பிறகும் இப்படி சொதப்பிய அரசு மருத்துவமனை ஊழியர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது?












Click it and Unblock the Notifications