சட்ட மாணவர் முன் ஜாமீன்-விசாரணை ஒத்திவைப்பு
சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பாரதி கண்ணன், அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகியோர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
கடந்த 12ம் தேதி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பயங்கர வன்முறை வெடித்தது. மாணவர்களில் இரு பிரிவினர் மோதிக் கொண்டதில் பாரதி கண்ணன், அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
3 பேரும் தொடர்ந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் 3 மாணவர்களும் முன் ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இவர்களது சார்பில் இவர்களின் பெற்றோர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுக்களில், எங்களது பிள்ளைகள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் மீது சென்னை போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க முயலுகின்றனர். எங்களைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
எனவே எங்களது பிள்ளைகளுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதேபோல, ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சித்திரைச்செல்வன் (இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்) உள்ளிட்ட 26 மாணவர்களும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் இன்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
முன்ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி தேவதாஸ், அவற்றின் மீதான விசாரணையை வருகிற 28ம் தேதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதேபோல மற்ற 26 மாணவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைக்கப்பட்டது.
உதவி கமிஷனர் மீது தாக்குதல்-மேலும் 2 மாணவர்கள் கைது:
இதற்கிடையே சென்னை சட்டக்கல்லூரி விடுதியில் கடந்த ஆண்டு உதவி கமிஷனர் தாக்கப்பட்ட வழக்கில், மேலும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10.10.2007 அன்று சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் வெடித்தது. மோதலை தடுக்கச் சென்ற கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ராஜாமணி, இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் மாணவர்களால் தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 53 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் நேற்று உத்திரமேரூரை சேர்ந்த மாணவர் தனசேகரன், பொன்னேரியை சேர்ந்த மாணவர் கண்ணதாசன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற அனைத்து மாணவர்களையும் கைது செய்ய கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications