தொடரும் மழைக்கு இதுவரை 15 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பெய்து வரும் கன மழைக்கு இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவர். விருத்தாச்சலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான பெண்ணின் கண்கள் தானமாக தரப்பட்டன.

சென்னை மற்றும் கும்பகோணத்தில் தலா 3 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் 18 வயது பெண், காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

கும்பகோணம் அருகே பந்தளம் என்ற கிராமத்தில், மழையால் அறுந்து கிடந்த மின்சார வயர் முகம்மது சுல்தான் (75)என்பவரது வீட்டு இரும்பு கேட்டில் விழுந்துள்ளது.

அதை அறியாத சுல்தான் கேட்டை திறக்க அதை தொட்டபோது மின்சாரம் பாய்ந்தது. அவரைக் காப்பாற்றுவதற்கு மனைவி சவீரா பீவி (60), மகன் சையத் அலி (25) ஆகியோர் முயன்றபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை திருவான்மியூர் நகரில் ரவிச்சந்திரன் (45), ஜெ.ஜெ. நகர் ஹூசேன் (18) ஆகியோர் மின்சாரம் பாய்ந்து இறந்தனர். பட்டினப்பாக்கம் இருதயம் (59) என்ற மீனவர் கடலில் மீன் பிடிக்கப் போனபோது கடல் கொந்தளிப்பால் கடலில் விழுந்து இறந்தார்.

சோகத்திலும் ஒரு தானம்:

விருத்தாச்சலத்தைச் சேர்நத் சத்யா (18) என்ற பெண், குளிப்பதற்காக பாத்ரூமுக்குப் போனபோது, அதன் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

மகளின் அகால மரணத்தால் துடிதுடித்த அவரது தந்தை கொளஞ்சியும், தாயாரும், பின்னர் மனதைத் தேற்றிக் கொண்டு தங்களது மகளின் கண்களைத் தானம் தர முடிவு செய்தனர்.

இதையடுத்து வடலூர் அரிமா சங்க டாக்டர்கள் விரைந்து வந்து சத்யாவின் கண்களை தானமாக எடுத்து கண் வங்கியில் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில், கெளதம் என்ற 7 வயது சிறுவன் தேங்கிக் கிடந்த மழை நீரில் மூழ்கி இறந்தான்.

கள்ளக்குறிச்சியில், சிவக்குமார் என்ற சிறுவன் கால்வாயில் விழுந்து இறந்தான். அதே கள்ளக்குறிச்சியில், கிருஷ்ணன் என்ற முதியவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

ஓரத்தநாட்டில், குப்பம்மாள் , திருவிடைமருதூரில் காமராஜ் ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.

தமிழகத்திலும், புதுவையிலும் இதுவரை மழைக்கு 15 பேர் பலியாகியுள்ளனர்.

கீழ்பவானி வாய்க்கால் உடைந்தது:

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கூரப்பாளையம் , கீழ்பவானி வாய்க்கால் உடைந்ததால், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

கடந்த சில நாட்களாக ஈரோட்டு மாவட்டத்தில் தொடர் மழை கொட்டித் தீர்த்த வண்ணம் உள்ளது. மாவட்டம் முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலில், 60 அடி நீளத்துக்கு திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால், வெள்ள நீர் ஊருக்குள் சீறப்பாய்ந்தது.

வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால், கூரப்பாளையம், கதிரம்பட்டி, திருவாச்சி ஆகிய மூன்று கிராமங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது.

வாய்க்கால் உடைப்பை சரி செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
அதே போன்று மழை காரணமாக ஈரோடு, பெருந்துறையில் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள், கரும்பு, வாழை தோட்டங்கள் போன்றவை மழை நீரில் முழ்கியுள்ளது. இதனை கண்ட விவசாயிகள் கண்ணீர் வடித்து கதறி அழுதனர்.

பவானி சாகர் அணையிலிருந்து ஏற்கனவே பாசனத்துக்காக நீர் திறந்து விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் திடீர் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூரில் நீர் வெளியேற்றம் நிறுத்தம்:

கன மழையை அடுத்து, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 73.02 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,130 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக பொது பணித்துறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு தற்போதைய கன மழை காரணமாக படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. தற்போது வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது.

கன மழை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பல ஹெக்டேர் விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இதனால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டடுள்ளது.

நெய்வேலியில் மின் உற்பத்தி பாதிப்பு:

கனமழை காரணமாக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் அதன் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக நெய்வேலி என்.எல்.சி.யில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரியை எடுத்து வரும் கன்வேயர் பெல்ட் மழையில் நனைந்துள்ளதால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவும், தற்போதைய மழையால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மழை ஓய்ந்த பின்பு உடனே இப் பிரச்சனை சரி செய்யப்படும். மீண்டும் வழக்கம் போல் மின் உற்பத்தி செய்யப்படும் என்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மின்துறை இயக்குனர் சேதுராமன் தெரிவித்தார்.

3 மீனவர்கள் மாயம்:

வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றத்தில் சிக்கி மாயமானார்கள்.

திருச்சி, தஞ்சை, திருவாரூர்,கரூர், நாகை போன்ற மாவடங்களில் கடும் மழை பெய்த வண்ணம் உள்ளது.
அதிலும் கடலோர மாவட்டங்களான நாகை, தஞ்சை, போன்ற மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகம் காணப்படுகிறது.

மேலும் கடலில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

இந்த நி்லையில் கடந்த 22 ம் தேதி அன்று கோடியக்கரையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற அக்கரைப்பேட்டை மீனவர்கள் ஆறுமுகம்(50), எத்திராஜ்(45), ஆதிமூலம்(50), ஆகியோர் இதுவரை கரை திரும்பவில்லை.

அதே போன்று கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற ரவி, மாரியப்பன், மூர்த்தி ஆகியோரது படகு காற்றில் அடித்துச் செல்லப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியில் கரை ஒதுங்கியது.

இந்த சம்பவத்தால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடலில் புயல் காற்றும், அலைகளின் சீற்றம் அதிகாமகவும் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிரமடைந்த புயல் சின்னம்:

இதற்கிடையே, வங்கக் கடலி்ல நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்புற தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரில், வானம் மேக மூட்டமாக காணப்படும். இடி, மின்னலுடன் அவ்வப்போது மழை பெய்யும்.

நெல்லையில் விடிய விடிய மழை:

அதே போல நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்ததால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தாமிரபரணி கரையோர மக்கள் வெளியேற கலெக்டர் உத்தரவிட்டார்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. நேற்று காலையும் மழை தொடர்ந்தது.. இதனால் நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட் சேவியர் காலனி உள்ளிட்ட பல பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

நெல்லை மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆய்குடியில் 79.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அம்பையில் 42, நாங்குநேரியில் 39.4, பாளையங்கோட்டையில் 60, ராதாபுரத்தில் 20, சங்கரன்கோவிலில் 36, செங்கோட்டையில் 27.7, சிவகிரியில் 38, தென்காசியில் 32, நெல்லையில் 55, ஆலங்குளத்தில் 20.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழையால் நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக தேர்வாணையர் கண்ணன் தெரிவித்தார்.

இன்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை:

இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் மழை நீடிப்பதால் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட
பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+