சிவகாமி ஐ.ஏ.எஸ் பகுஜன் சமாஜில் இணைந்தார்
சென்னை: தமிழகத்தில், அரசியலில் நுழைந்த 2வது பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெயரைப் பெற்றுள்ளார் சிவகாமி. சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இன்று இணைந்தார்.
பெரம்பலூரை சேர்ந்தவர் அதிகாரி சிவகாமி. பல்வேறு பணிகளை வகித்துள்ள அவர், தற்போது தமிழக அரசின் அச்சு மற்றும் எழுதுகோல் துறையின் ஆணையாளராக பணியாற்றி வந்தார்.
பணியில் இருந்து கொண்டே தலித் இலக்கியத்தில் மிளிர்ந்தார். தலித் பெண்களின் மேம்பாட்டுக்காகவும் குரல் கொடுத்து வந்தார்.
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் முழு அளவில் அரசியலில் ஈடுபட முடிவு செய்தார். சமீபத்தில் உ.பி. சென்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்தித்து பேசினார்.
இதையடுத்து சமீபத்தில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று முறைப்படி பகுஜன் சமாஜ் கட்சியி்ல் அவர் இணைந்தார். தி.நகரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றிக்காக தீவிர பிரசாரம் செய்ய உள்ளேன்.
தற்போது 12 முதல் 13 சதவீத பெண்களே அரசியலில் உள்ளனர். அதை 50 சதவீத அளவுக்கு உயர்த்த பாடுபடுவேன்.
ஒரு காரியத்தை செய்தால் அதனை முழு மூச்சுடன் செய்து முடிக்க வேண்டும். பணியில் இருந்து கொண்டே இரண்டையும் சரியாக செய்ய முடியாது. நேரமின்மை என்பது மிகப்பெரிய காரணம். அதனால் ராஜினாமா செய்து விட்டு முழுமையாக ஈடுபடப் போகிறேன்.
பெண்களுக்கு அரியல் விழிப்புணர்வு இல்லை. இருந்திருந்தால், பெண்களுக்கு ஏன் சட்டசபை யில் 12 சதவீதம், நாடாளுமன்றத்தில் 10 சதவீதம் மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு என்று தனி அரசியல் அமைப்பு வேண்டும்.
ஆணாதிக்க அரசியலில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கென்று ஒரு தனி அரசியல் அமைப்பு வேண்டும். பெண்கள் அரசியலில் தங்கள் உரிமைகளை போராடி பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
நான் கதைகள் எழுதும் போது, ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் போது, அவளின் பிரச்சனைகள் குறித்தும், சமுதாயத்தில் பெண்ணுக்குள்ள உரிமை கள் குறித்தும், எண்ணி பார்க்க நேரும். அச்சமயம் பெண்களின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை ஏற்படும். அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல வேண்டும் என்ற சிந்தனையும் ஏற்படும். பெண்களின் முன் னேற்றத்துக்கு முழு மூச்சாக பாடுபடுவதற்கு அந்த சிந்தனைகளே விதையாக விழுந்தன என்றார் சிவகாமி.
விரைவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியச் செயலாளர் பதவி சிவகாமிக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications