இந்தியா எங்கள் நண்பன், தடைகளை நீக்க வேண்டும்-பிரபாகரன்
தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.
அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.
எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் ராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.
ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்:
பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நார்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.
போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.
இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.
உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.
புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.
பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன ராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.
பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.
ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை:
இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.
எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.
தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.
இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் ராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.
அனைத்துலக நாடுகளின் பாராமுகம்:
சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.
மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, ராணுவப் பயிற்சிகளையும் ராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.
இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு ராணுவ பலத்திலும் ராணுவ அணுகுமுறையிலும் ராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.
தமிழினத்துக்கு எதிரான போர்:
தமிழர் தாயகத்தில் ராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.
இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.
இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.
பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான ராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.
சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.
வரலாறு காணாத கொடூர அடக்குமுறை:
எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.
உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.
சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.
ராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் ராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.
கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.
விடுதலை வேட்கையை அழிக்க முடியாது:
இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.
எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.
பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.
போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல:
உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.
எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.
உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்
எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.
இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!













Click it and Unblock the Notifications