புயல் கரை கடந்தும் தொடர்ந்து கன மழை - மக்கள் பேரவதி
சென்னை: நிஷா புயல் கரையைக் கடந்தும் கூட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. மழை வெள்ள பலி 89 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆறு நாட்களாக தமிழகத்தை கன மழை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக நிஷா புயல் சின்னம் உருவானது முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. விடாமல் பெய்து வந்த மழை, நிஷா புயல் நேற்று காரைக்காலில் கரையைக் கடந்த பின்னர் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கரையைக் கடந்த நிஷா புயல், காரைக்காலுக்கு வட மேற்குப் பகுதியில் நகர்ந்து நின்று விட்டதால் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த புயல் வலுவிழந்து விட்டது. படிப்படியாக வட மேற்கில் நகர்ந்து மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் புயல் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் மழை தொடர்ந்து இருக்கும் எனவும் அது எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.
தொடர்ந்து ஒரு வாரமாக பெய்து வரும் மழைக்கு இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை மிதக்கிறது
தொடர்ந்து நான்காவது நாளாக சென்னை நகரில் கன மழை பெய்து வருகிறது. விடாமல் பெய்து கொண்டிருக்கும் மழையால் சென்னை நகரும், புறநகர்களும் கிட்டத்தட்ட நீரில் மிதக்கின்றன.
எங்கு பார்த்தாலும் தண்ணீர் மயமாக உள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.
வேளச்சேரி, விஜய நகர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், தாம்பரம் புறநகர்ப் பகுதிகளில் ஏராளமான வீடுகள் நீரால் சூழப்பட்டுள்ளன அல்லது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இப்பகுதிகளில் வாகன நடமாட்டம் அறவே இல்லை. நடந்து செல்லக் கூட முடியாத அளவுக்கு தண்ணீர் இடுப்பளவையும் தாண்டி நிற்கிறது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 136.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியு்ளது.
மீனம்பாக்கத்தில் (அதாவது சென்னை புறநகரில்) 279.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளக்காடாக காணப்படுகிறது. வாகனங்கள் தேங்கித் தேங்கிச் செல்கின்றன. பல சாலைகளில் வாகனங்களே செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் ஆறு போலஓடிக் கொண்டிருக்கிறது.
பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது. தண்ணீர் மட்டம் குறைந்தால்தான் மின் விநியோகம் மீண்டும் தரப்படும் என மின்வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ..
காவிரி டெல்டா மாவட்டங்களிலும் இதே நிலைதான். ஏற்கனவே ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன.
நெற்களஞ்சியமான தஞ்சை மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. அதேபோல திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களிலும் நிலைமை மோசமாக உள்ளது.
இங்கு வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
கடலூர் மாவட்டமும் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரம், மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் வெள்ளக்காடாக காணப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காவிரி டெல்டா மாவட்டங்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஏரிகள் நிரம்புகின்றன
தொடர் மழை காரணமாக சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இந்த ஏரிகள் அனைத்துமே நிரம்பி விட்டன. இதையடுத்து உபரி நீரை அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நேற்று இரவு முதல் விநாடிக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அனகாபுத்தூர், கெளல்பஜார், மணப்பாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கோட்டூர், அடையார் பகுதிகளைச் சேர்ந்த தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல பூண்டியிலிருந்து விநாடிக்கு 6020 கன அடி நீர் திறந்து விட்டிருப்பதால், நாப்பாளையம், காரமடை, தாமரைப்பாக்கம், மீஞ்சூர் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.
பூண்டியில் 34.3 அடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், சோழவரத்தி்ல் முறையே 22.05, 17.78. 13.92 அடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், ஏரிகள் அபாயகரமான நிலையில் இருப்பதாலும், ஆந்திர மாநிலம் கண்டலேறு கால்வாய் மூலம் கிருஷ்ணா நீரை விடுவிப்பதை நிறுத்துமாறு ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications