மும்பை தாக்குதலில் எங்களுக்குத் தொடர்பில்லை - பாக்.
இஸ்லாமாபாத்: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இதுகுறித்து அவசரப்பட்டு இந்தியா புகார் கூறக் கூடாது என அந்த நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் செளத்ரி முக்தார் அகமது கூறியுள்ளார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பே காரணம் என வலுவாக நம்பப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்தே தீவிரவாதிகள் கப்பல் மூலம் மும்பைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மும்பை சம்பவத்திற்கும், தங்களது நாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அகமது கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் பங்கு எதுவும் இல்லை. இதற்கு முன்பும் கூட பலமுறை பாகிஸ்தானின் பெயரை சம்பந்தப்படுத்தி குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவை தவறு என்பது பின்னர் நிரூபனமானது என்றார்.
இதற்கிடையே, நான்கு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறுகையில், இதுபோன்று அவசரப்பட்டு கருத்து கூறுவதை இந்தியா தவிர்க்க வேண்டும். தீவிரவாதத்தை இரு நாடுகளும் இணைந்துதான் எதிர்கொள்ள வேண்டும்.
அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரக் கூடாது. சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு சம்பவம் இதற்கு ஒரு நல்ல உதாரணம் என்றார் அவர்.
சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தானே காரணம் என முதலில் நம்பப்பட்டது. ஆனால் இந்து தீவிரவாத அமைப்புகளே அதற்குக் காரணம் என சமீபத்தில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் சிக்கியுள்ள தீவிரவாதிகளிடமிருந்து கிடைத்த தகவல்கள், லஷ்கர் இ தொய்பா அமைப்பு இதில் சம்பந்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக மகாராஷ்டிர போலீஸார் கூறுகின்றனர்.
மேலும் டிரைடென்ட் ஹோட்டலில் பாதுகாப்புப் படையினரிடம் உயிருடன் சிக்கிய தீவிரவாதி அபு இஸ்மாயில் என்பவர் பாகிஸ்தானின் பரீத்கோட் நகரைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
