இந்தியா தந்த 21 தீவிரவாதிகளின் பட்டியல்

டெல்லி: நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க உயர் மட்ட கேபினட் கமிட்டிக் கூட்டம் இன்று கூடுகிறது. இதி்ல் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
சிவராஜ் பாட்டீல் நீக்கப்பட்டுவிட்ட நிலையில் புதிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி, முப்படைத் தளபதிகள், ரா, ஐபி, ராணுவ உளவுப் பிரிவு, கடற்படை- விமானப் படையின் உளவுப் பிரிவினர் மற்றும் உள்துறை, பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக தாவூத் இப்ராகிம், லஷ்கர் ஏ தொய்பாவைச் சேர்ந்த 3 முக்கிய தீவிரவாதிகள், ஜெய்ஷ் ஏ முகம்மத்தை நிறுவிய தீவிரவாதி மசூத் அஸார் உள்ளிட்ட 21 மிக முக்கிய தீவிரவாதிகளை ஒப்படைக்குமாறு நேற்று பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கோரிக்கை வைத்தது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் சில அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இன்றைய கேபினட் கூட்டத்தில் முடிவுகள் எடு்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
இவர்களை ஒப்படைக்காவிட்டால் பாகிஸ்தானுடனான உறவை துண்டித்துக் கொள்வது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானியும் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அதில், இந்தியாவின் எச்சரிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது.
தாவூத் இப்ராகிம் இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளுக்குத் தொடர்புடையவன். மசூத் அஸாரைத்தான் இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகளைக் காக்க இந்தியா காஷ்மீர் சிறையிலிருந்து விடுவித்து ஆப்கானிஸ்தானின் காண்டஹார் நகரில் இறக்கிவிட்டுவிட்டு வந்தது.
இவன் உருவாக்கி ஜெய்ஷ் ஏ முகம்மத் தான் இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதலை நடத்தியது.
இப்போதைய மும்பை தாக்குதலை ஒருங்கிணைத்ததில் லஷ்கர் ஏ தொய்பாவைச் சேர்ந்த ஹபீஸ் முகம்மத் சயீதுக்கு முழுமையான தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனையும் ஒப்படைக்குமாறு இந்தியா கோரியுள்ளது.
மேலும் ஹர்கத் உல் முஜாகிதீன், காலிஸ்தான் லிபரேசன் பிரண்ட், ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாமி ஆகியவற்றைச் சேர்ந்த சிலரின் பெயர்களும் அந்த 21 பேர் பட்டியலில் அடங்கும்.
பாக். பதிலுக்கு காத்திருக்கிறோம்-பிரணாப்:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தானில் பதுங்கியுள்ள இந்தியாவுக்கு எதிரான குற்றவாளிகளை ஒப்படைக்குமாறு கோரியுள்ளோம்.
இப்போது பாகிஸ்தானின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அவர்களது நடவடிக்கையைப் பொறுத்தே எங்களது நடவடிக்கை அமையும் என்றார்.
இருவரும் சேர்ந்து விசாரிக்கலாம்-பாக்:
இதற்கிடையே இந்த தாக்குதல் குறித்து இரு நாடுகளும் சேர்ந்து விசாரிக்கலாம் என பாகிஸ்தான் கூறியுள்ளது. அந் நாட்டில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications