அச்சுதானந்தனின் 'நாய்' பேச்சு-காரத் மன்னிப்பு
திருவனந்தபுரம்: வீர மரணம் அடைந்த என்.எஸ்.ஜி. வீரர் சந்தீப்பின் பெங்களூர் வீட்டுக்குச் சென்று, அவரது தந்தை உன்னி கிருஷ்ணனால் விரட்டப்பட்ட கேரள முதல்வர் அச்சுதானந்தன், அவரை கன்னாபின்னாவென்று திட்டி பேட்டியளித்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சந்தீப் மும்பையில் தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.
இவருடைய வீடு பெங்களூரில் உள்ளது. சந்தீப்பின் இறுதிச் சடங்கும் பெங்களூரில் தான் நடந்தது. ஆனால், அவரது மறைவுக்கு கேரள அரசிடமிருந்து ஒரு இரங்கல் செய்தி கூட வரவில்லை.
இது குறித்து கேரள பத்திரிக்கைககள் அரசையும் முதல்வர் அச்சுதானந்தனையும் கிழி கிழியென கிழித்த பின்னரே விழித்தார் முதல்வர்.
இதையடுத்து பெங்களூரில் உள்ள சந்தீப்பின் வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டார். ஆனால், அவர் வருவதை விரும்பவில்லை என சந்தீப்பின் தந்தை உன்னி கிருஷ்ணன் தெளிவுபடுத்திவி்ட்டார்.
தானாக வந்திருந்தால் பரவாயில்லை, பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டிய பிறகு அவர் வர வேண்டிய அவசியம் இல்லை என்று உன்னிகிருஷ்ணன் தன்னைத் தொடர்பு கொண்ட கேரள அதிகாரிகளிடம் கூறிவிட்டார்.
ஆனால், இதையும் மதிக்காமல் அவரது வீட்டுக்கு உள்துறை அமைச்சர் பாலகிருஷ்ணனனையும் அழைத்துக் கொண்டு கிளம்பி வந்தார் அச்சுதானந்தன். அவரது வருகையையொட்டி சந்தீப்பின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மோப்ப நாய்களைக் கொண்டு கர்நாடக போலீசார் சோதனைகள் நடத்தினர். இது உன்னிகிருஷ்ணனை மேலும் கோபமடையச் செய்தது. அவர் அச்சுதானந்தன் வரக் கூடாது என சத்தம் போட்டதால், முதல்வருடன் வந்த கேரள உளவுப் பிரிவினரும், போலீசாரும் கர்நாடக போலீசாரும் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு வெளியே போய் விட்டனர்.
முதல்வர் வந்து போன பிறகு வருமாறு கூறி அவரை தடுத்த நிறுத்த சில கேரள போலீசாரும் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். இது அவரது கோபத்தை மேலும் அதிகரித்தது.
இந் நிலையில் முதல்வர் சந்தீப்பின் வீட்டுக்குள் நுழைந்து வீரரின் தாயாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு ஓடி வந்தார் உன்னிகிருஷ்ணன். அவரை கேரள போலீசார் தடுத்தனர். என் வீட்டுக்குள் போக விடாமல் எப்படித் தடுக்கலாம் என்று உன்னிகிருஷ்ணன் எகிறவே பதிலுக்கு கேரள போலீசாரும் பதில் சொல்லவே, நாய்களே வெளியே போங்கள் என திட்டிக் கொண்டு உள்ளே சென்றார் உன்னிகிருஷ்ணன்.
இதையடுத்து கதவைப் பூட்டிவிட்டு முதல்வரை சரமாரியாக அவர் திட்டியதாகத் தெரிகிறது.
இவ்வாறு அசிங்கப்பட்ட முதல்வர் அச்சுதானந்தன் கேரளா திரும்பி பின் அங்கு ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு கன்னாபின்னாவென ஒரு பேட்டி அளித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
உன்னி கிருஷ்ணனின் தந்தை தன்னை வெளியேற்றியது குறித்து அவர் குறிப்பிடுகையில், சந்தீப்பை நான் பெரிதும் மதி்க்கிறேன். அவரது குடும்பம் என்ற வகையில் அவர்கள் அனைவரையுமே மதிக்கிறேன். ஆனால், அவரது தந்தை இவ்வாறு நடந்திருக்கக் கூடாது.
இறந்தது சந்தீப்பாக இல்லாவிட்டால் ஒரு நாய் கூட அவரது வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியிருக்காது. இதை முதலில் உன்னி கிருஷ்ணன் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வீரரின் தந்தையான உன்னி கிருஷ்ணன் இப்படி நடந்திருக்கக் கூடாது. இது அவருக்குப் பொருத்தமான செயலல்ல.
சந்தீப்பின் வீட்டுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா தான் போக வேண்டும் என சட்டம் ஏதாவது உள்ளதா என்று ஆவேசமாக பேசியுள்ளார் அச்சுதானந்தன்.
அச்சு பேச்சு: மன்னிப்பு கேட்ட காரத்
இதற்கிடேயே கேரள முதல்வர் அச்சுதானந்தனின் அசிங்கமான பேச்சுக்காக தான் மன்னிப்பு கேட்பதாக சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அச்சுதானந்தன் பேசிய பேச்சு மிகவும் வருத்தத்திற்குரியது, துரதிர்ஷ்டவசமானது.
நான் இதுகுறித்து அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, சந்தீப் உண்ணிகிருஷ்ணனின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில்தான் சென்றேன். வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் அதில் இல்லை என்று தெரிவித்தார்.
இருப்பினும் அவர் பேசிய சில வார்த்தைகள் துரதிர்ஷ்டவசமானது, இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் காரத்.
மன்னிப்பு கேட்க மாட்டாராம் அச்சு:
இதற்கிடையே, தான் பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார் அச்சுதானந்தன்.
நாய் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி குறித்து அச்சுதானந்தன் கூறுகையில், எனது பேச்சுக்காக நான் மேஜர் உண்ணிகிருஷ்ணனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். ஆனால் அவர்களது குடும்பத்தை நான் மதிக்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications