பணிந்தது காங்.- ஷிண்டே அல்லது ராணே தான் முதல்வர்!
டெல்லி: மகாராஷ்டிர முதல்வராக மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே அல்லது நாராயண் ரானேவை நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது.
இதையசுத்து இன்று ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் தேஷ்முக் வழங்குகிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களிடம் பேசுகையில், பதவி விலகுமாறு தேஷ்முக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
புதிய சட்டசபை காங்கிரஸ் தலைவர் மும்பையில் தேர்வு செய்யப்படுவார். இதுதொடர்பான கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் மேற்பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றார் அந்தோணி.
இதன் மூலம் இன்று காலை ஆளுநரை சந்தித்து தனது விலகல் கடிதத்தைக் கொடுக்கிறார் தேஷ்முக்.
முழுப் பதவிக் காலத்தையும் முடிக்க முடியாமல் தேஷ்முக் பதவி விலகுவது இது 2வது முறையாகும்.
1999ம் ஆண்டு விலாஸ்ராவ் தேஷ்முக் முதல்வராகப் பதவியேற்றபோது 3 ஆண்டுகள், 3 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடிக்க முடிந்தது. 2003ம் ஆண்டு தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்தார். சுஷில் குமார் ஷிண்டே முதல்வரானார்.
தற்போது மும்பைத் தாக்குதல் சம்புவத்தால் மீண்டும் தனது பதவியை முழுமையாக முடிக்க முடியாமல் விலகியுள்ளார்.
200க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காவு வாங்கிய மும்பைத் தீவிரவாத தாக்குதலால் இதுவரை 3 பேரின் பதவிகள் பறிபோயுள்ளன. முதலில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் போனார். பின்னர் மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீல் விலகினார். தற்போது முதல்வர் தேஷ்முக் பதவி விலகுகிறார்.
தாக்கரேக்களை எதிர்கொள்ள மராட்டா ஒருவரை முதல்வராக்க காங்கிரஸ் திட்டமிட்டது. இதனால் அசோக் சவானின் பெயரை காங்கிரஸ் பரிசீலித்தது. ஆனால், அவர் முதல்வரானால் மராட்டாவான தனது முக்கியத்துவம் குறையும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறிவிட்டார்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் கூட்டணிக் கட்சியான பவாருக்கு பணிந்து ஷிண்டே அல்லது நாராயண் ரானேவை காங்கிரஸ் முதல்வராக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும் முன்னதாக முதல்வராகலாம் என்று கூறப்பட்ட தொழில்துறை அமைச்சர் அசோக் சவானும் தனது ஆதரவாளர்களைத் திரட்டி தலைமைக்கு நெருக்கடி தந்து வருகிறார்.
'டெரர் டூர்'-மன்னிப்பு கேட்ட தேஷ்முக்:
இதற்கிடையே தாஜ் ஹோட்டலிலும் ஓபராய் ஹோட்டலிலும் நடந்த தாக்குதலைப் பார்வையிட பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவையும், எனது மகனும் நடிகருமான ரித்தேஷையும் நான் உடன் அழைத்துச் சென்றது தவறு தான் என்று அதற்காக பதவி பறிக்கப்பட்ட விலாஸ்ராவ் தேஷ்முக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications