பக்ரீத்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இஸ்லாமிய சமூகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தியாகத் திருநாளாம் ஈத் உல் பண்டிகையையொட்டி தமிழகத்திலும், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திருநாளில் ஒற்றுமை, அன்பு ஆகியவற்றை வளர்த்து நமது நாட்டை அமைதி, வளம், முன்னேற்ற பாதையில் வழி நடத்திச் செல்வோம் என்று கூறியுள்ளார்.
கருணாநிதி:
முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய மக்களால் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்நாளைக் கொண்டாடும் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் நலமும் வளமும் பெருகிட எனது இதயம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியவர் இடர்தீர வழங்கி மகிழ்வதை "ஈத்துவக்கும் இன்பம்'' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இஸ்லாமியப் பெருமக்களுக்கு வழி காட்டுவது இந்த பக்ரீத் பெருநாள்.
நபிகள் நாயகத்திடம் ஒரு மனிதர், "இஸ்லாமில் சிறந்தது எது?'' என்று கேட்க, அதற்கு அவர்கள், "ஏழைகளுக்கு உணவளித்தல், நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் கூறுதல்'' என்றார்கள்.
ஏழைகளுக்கு உணவளித்தல் மூலம் இரக்க உணர்வும், எளியோரை அரவணைக்கும் பெருந்தன்மையும் வளரும், சலாம் கூறுவதன் மூலம் இதயங்கள் இணையும், மனித மனங்களில் நேச ஊற்றுகள் பொங்கிப் பெருகும்.
அது தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் மனத் தூய்மையையும், நெருக்கத்தையும், சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்கிறது இஸ்லாம் நெறி.
இந்த நெறி தழைக்க, எங்கும் மனிதநேயம் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம். எல்லோரிடமும் இன்முகம் காட்டி, இன் சொல் கூறி இதயங்கள் இணைந்து இன்புற ஏற்ற வழி அமைப்போம் என இத்திருநாளில் அனைவரும் உறுதி ஏற்போமாக!
ஜெயலலிதா:
அதிமுக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்
கடமை உணர்வுடன் இறை நெறியைக் கடை பிடிக்கும் இஸ்லாமியப் பெரு மக்கள் கொண்டாடி மகிழும் புனித பக்ரீத் திருநாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பக்ரீத் திரு நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ஹஜ் என்னும் புனிதப்பயணம், இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் உன்னதமானது. நபிகளின் தந்தை என அழைக்கப்படும் ஹஜ்ரத் இப்ராஹிம் அவர்களின் குடும்பத்தினர் செய்த தியா கங்கள் மார்க்கச் செயல்களாக விதிக்கப்பட்டு நினை வூட்டப்படும் திருநாளே பக்ரீத் எனும் தியாகத் திருநாள் ஆகும்.
உற்றார், உறவினர், ஏழைகள் என அனைவரும் இணையும் புனிதமான தியாகத் திருவிழாவாம் இந்த பக்ரீத் நன்னாளில், பகிர்ந்தளித்து மகிழ்ச்சியடையும் சகோதரத் துவத்தையும், மனித நேயத்தையும் வளர்த்திட நாம் உறுதி பூணுவோம்.
இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று அமைதியுடன் வாழ வேண்டும் என்று என்னுடைய அவா வினைத் தெரிவித்து மீண்டும் எனது இனிய பக்ரீத் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமதாஸ்:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள செய்தியில்,
பக்கத்து வீட்டுக்காரன் பட்டினி கிடக்கும் பொழுது, தான் மட்டும் வயிறு நிறைய சாப்பிடுகிறவனை இறை நம்பிக்கையாளனாகக் கொள்ள முடியாது என்பதும், ஈகை குணமற்ற அறிவாளியை விட, கல்வி அறிவற்ற தர்மவானே இறைவனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதும் நபிகள் நாயகத்தின் கட்டளைகள், அந்தக் கட்டளைகளை நிறைவேற்றி மகிழ்வதற்கு வாய்ப்பு அளிக்கின்ற இந்தத் திருநாளில் வறியவர்களுக்கெல்லாம் உணவு அளித்து மகிழ்ந்து இறைத்தூதரின் கட்டளையை நிறைவேற்றுகின்ற இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்றிட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
வைகோ:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில்,
உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள், தங்கள் மேலான கடமையும் ஹஜ் எனும் புனிதப் பயணத்தை மேற்கொண்டு, நிலம், இனம், மொழி, நாடு எனும் வரப்புகளை உடைத்து வெள்ளம் போல் மனிதர்கூட்டம், கள்ளம் கபடமின்றி உள்ளத்தில் ஒருவராய் மக்கமா நகரில் ஏகத்துவக் கடலில் சங்கமித்து மனித புனிதராய் மாற்றம் பெறம் நாள் இந்நாள்.
சமூக நல்லிணகத்தைப் பாழ்படுத்தவும், இரத்தக் களறிகளை விளைவிக்கவும் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களையும், சவாலையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ளவும் சகோதரத் துவத்தை காத்து சமூக நல்லிணக்கத்தையும் சாந்தியும் சமாதானமும் தழைக்கச் செய்யுவும் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம். இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கபாலு:
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள செய்தியில்,
திருக்குரானில் அறிவுறுத் தியபடி குர்பானி' நாள் என்று தியாகத்தை சிறப்பிக் கும் வகையில் வசதி படைத்தோர் ஏழைகளுக்கு உதவுகிற ஒப்பற்ற பண்பும், ஈகைத் தன்மையும் இணைந்து ஒருவருக்கொருவர் பாசம், கருணை, சகோதரத்துவம் மலர கொண்டாடப்படுகிற ஒப்பற்ற திருநாள் இது.
இப்புனித நாளில் அண்ணல் நபிகள் நாயகம் சமுதாயத்திற்கு வகுத்தளித்த அறநெறிகளை குறிப்பாக மனித குலத்தில் பகை உணர்வு இன்றி வன்முறையை ஒழித்து அனைவரும் அமைதி, சமாதான வாழ்வு பெற வேண்டும் என்ற அவரது அரிய போதனையை நினைவில் கொண்டு நாட்டில் மத நல்லிணக்கம் மேம்பட்டிட சாதி, மத, இன மொழிப் பிரிவுகள் கடந்து ஒற்றுமைக்கு வழி வகுப்போம்.
திருமாவளவன்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
பிறருக்கு உதவுதல், பிறருக்காக உழைத்தல், பிறருக் காகத் தம்மை அர்ப்பணித் தல் போன்ற பண்பு நலன் களை மானுடம் போற்ற வேண்டுமென்பதை வலியுறுத் தவே ஈகைப்பண் பின் அடையாளமாக இத்த கையதொரு பண்பாட்டுத் திருவிழாவை இஸ்லாம் கொண்டாடி வருகிறது.
இஸ்லாமியர்களின் பெயரால், மானுடத்திற்கெதிரான, மனித நேயமற்ற வன்முறை செயல்களை சில பயங்கரவாதக் கும்பல் முன்னெடுப்பது மனித நேயத்தின் வடிவமான இmdலாத்தைப் பழிப்பதாக அமைந்து விடுவதைக் காண முடிகிறது. ஆகவே, இஸ்லாமியச் சமூகத்தின் மீது திணிக்கப்படும் அவதூறுகளைத் துடைத்திட, மும்பையில் நடந்த பயங்கரவாத நடைமுறைகளைத் கண்டிப்பதும், அவற்றுக் கெதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் அணி திரள வேண்டியதும் மிக மிக இன்றியமையாதது என்பதை இந்த ஈகைத் திருநாளில் உணர்வோம். அதனை நடைமுறைப்படுத்த உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications