5 ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை தீவிரவாதிகளாக அறிவிக்க யு.எஸ். திட்டம்

இதுதொடர்பான பட்டியலை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதால் இந்த தடை நடவடிக்கைக்கு அமெரிக்கா முயலுகிறது.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட் கூறுகையில், யார் யார் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பது அந்தப் பட்டியல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்படும்போது தெரிய வரும்.
இப்போதே அதில் உள்ள பெயர்கள் குறித்து நான் கூற முடியாது. இப்போது அவற்றை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது என்றார் உட்.
இதற்கிடையே, ஏற்கனவே இப்படி ஒரு பட்டியலை அமெரிக்கா அனுப்பி விட்டது. அதில் பல ஐ.எஸ்.ஐ அதிகாரிகள், பாகிஸ்தான் பிரமுகர்கள் சிலரின் பெயர் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்த உட் மறுத்து விட்டார்.
1987 முதல் 89 வரை ஐ.எஸ்.ஐயின் தலைவராக (இயக்குநர்) பதவி வகித்தவர் குல். ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக இருந்தவர். இவர்தான் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை பயிற்று வித்து அனுப்ப உதவுகிறார் என்பது இந்தியாவின் நீண்ட கால குற்றச்சாட்டு. மும்பை தீவிரவாத செயலிலும் குல்லுக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாக இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இந்தப் பட்டியலில் மேஜர் ஜெனரல் ஜாகிருல் இஸ்லாம் அப்பாசி மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் அரசு கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
குல் உள்ளிட்டோரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் படைகள் ஆக்கிரமித்தபோது, அவர்களுக்கு எதிராக தீவிரவாதிகளை வளர்த்து, பயிற்று வித்து அனுப்பியவர் குல் என்பது நினைவிருக்கலாம். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் தீவிரவாதிகள் செய்து வரும் அட்டகாசத்திற்கும் குல்லே காரணமே என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தீவிரவாதிகளுக்குப் பகிரங்கமாக ஆதரவுக் குரல் கொடுத்து வருபவர் குல்.
குல்லை ஒப்படைக்கக் கோரும் இந்தியா:
இந்த நிலையில் மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் நேரடித் தொடர்புடைய ஹமீத் குல்லை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
ஜாகி உர் ரஹ்மான் லக்வியுடன் குல்லையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் சிலருக்கு மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் தொடர்பு இருப்பதை சமீபத்தில் இஸ்லாமாபாத் வந்திருந்த அமெரிக்க துணை தளபதி முல்லனிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர். இந்தத் தகவலை முல்லன் இந்தியாவுக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்தே ஹமீத் குல்லை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
லஷ்கர் இ தொய்பாதான் மும்பைத் தாக்குதலுக்குக் காரணம். லஷ்கர் அமைப்பினருக்கு ஹமீத் குல் உள்ளிட்ட ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் பெரும் உதவிகளைச் செய்துள்ளனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக அமெரிக்கா மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா தெரிவித்துள்ளது. எனவே குல் உள்ளிட்டோரை அனுப்பியாக வேண்டும் என்றும் இந்தியா திட்டவட்டமாக பாகிஸ்தானுக்குத் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து அவர்களை இயக்கியது லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த யூசுப் முஸ்ஸமில் என்பவர் தான் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இதை பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரைஸ் ஏற்கனவே தெரிவித்துதான், 48 மணி நேர கெடுவை விதித்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத்த தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ. இருப்பது குறித்து பலமுறை அமெரிக்காவிடம் இதற்கு முன்பு இந்தியா கூறியபோதெல்லாம் அது அதை முழுமையாக ஏற்க மறுத்து வந்தது.
ஆனால் தற்போதைய மும்பைச் சம்பவம் தொடர்பாக வலுவான ஆதாரங்களை அமெரிக்காவின் முன்பு இந்தியா தெரிவித்த பிறகே அது முன்பை விட தீவிரமாக பாகிஸ்தானை நெருக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்துதான் ஹமீத் குல் உள்ளிட்ட ஐந்து முக்கிய ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளின் பெயர்களை ஐ.நா. சபையிடம் கொடுத்து அதன் மூலம் அவர்களுக்குத் தடை விதிக்கவும், தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்க்கவும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது.












Click it and Unblock the Notifications