விரைவில் கடும் நடவடிக்கைகள்: ப.சிதம்பரம்
டெல்லி: தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்க தேவையான போதுமான கடும் நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். விரைவில் பாதுகாப்பு தொடர்பான கடும் நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் நடந்த மும்பைத் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், இதுவரை தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தேவையான கடும் நடவடிக்கைகள் எடுக்க்படவில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
அதேசமயம், இனியும் இப்படியே இருக்க முடியாது. இருக்கவும் மாட்டோம். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எந்த வழியிலும் தீவிரவாத செயல்களுக்கு இடம் கிடைத்து விடாதபடி பாதுகாப்பு கடுமையாக்கப்படும்.
அப்படிப்பட்ட கடுமையான முடிவுகளை அரசு இனி எடுக்கும். கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அடுத்த சில வாரங்களில் அல்லது மாதங்களில் இத்தகைய கடுமையான நடவடிக்ககளை நாடு காணும்.
மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் யார் என்பதற்கான போதிய ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. சந்தேகத்திற்கு இடமில்லாமல், எந்தவித குழப்பமும் இல்லாமல் நமது விரல்கள் பாகிஸ்தானை நோக்கியே நீளுகின்றன.
இதை நான் பழிவாங்கும் உணர்வோடோ அல்லது கோபத்தோடோ கூறவில்லை. மாறாக கனத்த இதயத்துடன், மாறாத வலியுடன் இதைக் கூறுகிறேன் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications