புலிகளின் அனுபவத்தால் எங்களுக்கு அதிக இழப்புகள்: பொன்சேகா
கொழும்பு: விடுதலைப் புலிகளிடம் உள்ள அனுபவம் மிக்க வீரர்களால் இலங்கைப் படைகளுக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் பிசினஸ் டுடே இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
பொன்சேகா அளித்துள்ள பேட்டி:
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது நான் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தேன்.
போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம்.
ராணுவத் தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். ராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தேன்.
எனது சிந்தனைகள் மரபு வழியிலானது அல்ல, அது வேறுபட்டதாகவே இருந்தது. இளநிலை அதிகாரிகளை போர் முனை கட்டளை அதிகாரிகளாக நியமித்தேன்.
உதாரணமாக, ஐந்தாவது நிலையில் உள்ள மூத்த அதிகாரியையே யாழ். குடாநாட்டின் கட்டளை அதிகாரியாக நியமிப்பது வழக்கம்.
ஆனால், மூத்த அதிகாரிகளின் நிலையில் 15 ஆவது இடத்தில் இருந்தவர் யாழ். குடாநாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் அதன் பலா பலன்கள் அதிகம்.
அதேபோல 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்தர் சில்வா சீனியாரிட்டி அடிப்படையில் 45 ஆவது இடத்தில் இருப்பவர். அவர், தற்போது பூநகரியை கைப்பற்றியுள்ளார்.
இதற்கு பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவின் ஆதரவும் எனக்கு இருந்தது. இருவரும் இணைந்து தேவையான ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் கொள்முதல் செய்ததுடன், பயிற்சி மற்றும் உத்திகளையும் வடிவமைத்திருந்தோம்.
தளபதி பதவிக்கு நான் வந்த போது 40,000 சிப்பாய்களுக்கு தலைக்கவசம் கிடையாது, பலரிடம் ஒரு ஜோடி சீருடை மட்டுமே இருந்தது. 40,000 பேருக்கான அங்கிகளுக்கும் தட்டுப்பாடு காணப்பட்டது. எல்லாவற்றையும் சீர் செய்தேன்.
படையினரின் எண்ணிக்கையிலும் நாம் பலவீனமாக இருந்தோம், சில பட்டாலியன்கள் சிதைவடைந்திருந்தன. ஐந்து டிவிசன்களை நான் உருவாக்கியுள்ளேன்.
முன்னர் வருடத்திற்கு 3,000 பேரையே படையில் சேர்க்க முடிந்தது, தற்போது நாம் ஒரு மாதத்திற்கு அதனை எட்டி வருகின்றோம்.
கடந்த வருடம் 32,000 படையினரையும் இந்த வருடம் 34,000 படையினரையும் சேர்த்துள்ளோம்.
பதவிக்கு நான் வரும்போது ராணுவம் 1 லட்சத்து 16 ஆயிரம் பேரைக் கொண்டிருந்தது. தற்போது அது 1 லட்சத்து 70 ஆயிரம் பேரைக் கொண்டுள்ளது. நான் 50 பட்டாலியன்களை உருவாக்கியுள்ளேன்.
தற்போதைய போருக்கு விடுதலைப் புலிகள் அவர்களை தயார்படுத்தவில்லை. போர் ஆரம்பிக்கும் போது அவர்கள் 10,000 பேரை கொண்டிருந்தனர்.
பின்னர் மேற்கொண்ட படைச் சேர்ப்புக்களால் அவர்களின் பலம் 15,000 ஆக உயர்ந்தது. ஆனால் அவர்களில் 12,000 பேர் தற்போது கொல்லப்பட்டு விட்டனர்.
எனவே, அவர்களில் தற்போது 2,500 பேரே எஞ்சியுள்ளனர். அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை உள்ளது.
எனினும், விடுதலைப் புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. எனவே தான் படைத்தரப்பு அதிகம் இழப்புக்களை சந்தித்து வருகின்றது.
கண்ணி வெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் கண்ணி வெடிகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, அதைக் கைப்பற்றுவது லேசான காரியம் அல்ல என்று கூறியுள்ளார் பொன்சேகா.












Click it and Unblock the Notifications