ஜெயலலிதாவின் 'புரட்சிகள்'-பட்டியலிடும் ஸ்டாலின்

தனது இணையத் தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள்:
கேள்வி: போயஸ் தோட்டத்தில் சிவப்புக் கொடிகள் பறக்கின்றனவே?
ஸ்டாலின்: தோழர்கள் புரட்சிகளை விரும்புகிறவர்கள். ஒரு சொட்டு மையினால் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் வேலையிலிருந்து நீக்கிய புரட்சி, நள்ளிரவில் அரசு ஊழியர்களின் வீட்டுக் கதவை தட்டி கைது செய்த புரட்சி, தடுக்க வந்த அவர்களின் குடும்ப பெண்கள் மீது விபச்சாரத் தடுப்பு வழக்கு போடுவேன் என மிரட்டிய புரட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் வெத்துவேட்டுகள் என்றும் மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றித்தான் வெற்றி பெறுகிறார்கள் என்றும் சட்டசபையிலேயே பேசிய புரட்சி,
எல்லாவற்றுக்கும் மேலாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விருந்து வைத்த புரட்சி என இத்தனை புரட்சிகளுக்காகவும் தான் போயஸ் தோட்டத்திற்கு தோழர்கள் பூங்கொத்துடன் சென்று புன்னகை தவழ போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்கள் போலும்.
கேள்வி: அழகிரியுடன் மதுரையிலிருந்து ஒன்றாக வந்தீர்களே; அந்த அனுபவம் எப்படி?
ஸ்டாலின்: மதுரையிலிருந்து மட்டுமல்ல, ஒரே தாய்- தந்தையிடமிருந்தும் ஒன்றாக வந்தவர்கள் தான் நாங்கள். கழகம் எனும் குடும்பத்திலும் ஒன்றாகவே இருக்கிறோம். அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்போது கழகத்தினருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சில கட்சியினருக்கு எரிச்சலாக இருக்கிறது. எதிரிகள் எரிச்சல்படுகிறார்கள் என்றால் கழகத்தின் பலம் கூடுகிறது என்று அர்த்தம்.
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான 'செமி பைனல்' என வர்ணிக்கப்பட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் அதிக வெற்றிகள் பெற்றிருப்பது எதைக் காட்டுகிறது?
ஸ்டாலின்: மதவெறிக்கு மக்கள் இடம் தர மாட்டார்கள் என்பதையும் நான்கரை ஆண்டுகால நல்லாட்சிக்கு ஆதரவாகத்தான் இந்தியா இருக்கிறது என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதை 'செமி பைனல்' என வர்ணித்த பாஜகவினர் தான் தேர்தலுக்கு முன்பாகவே அதாவது 'செமி பைனல்' தொடங்குவதற்கு முன்பாகவே பைனலுக்கான 'கேப்டனை' (பிரதமர் வேட்பாளராக அத்வானியை) அறிவித்து, ஆளில்லாத மைதானத்தில் பந்தே இல்லாமல் காற்றில் கால்களை உதைத்துக் கொண்டிருந்தார்கள். 'செமி பைனலில்' தோற்றவர்கள் பைனலுக்கு தகுதியில்லாதவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.
கேள்வி: திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர்களான பெரியார்-அண்ணா-கருணாநிதி இந்த மூவரையும் அறிந்த ஒரு சில அரசியல் பிரமுகர்களில் ஒருவராக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த முப்பெரும் தலைவர்களை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?
ஸ்டாலின்: உறக்கத்தில் இருந்த திராவிட இனத்தை தட்டி எழுப்பியவர் பெரியார். அதன் உரிமைகளை வென்றிடுவதற்கான அரசியல் பாதையை உருவாக்கியவர் அண்ணா. அந்த நெடும்பாதையில் சளைக்காமல் பயணம் மேற்கொண்டு திராவிட இனத்தின் உரிமைகளை மீட்டு வெற்றியை நிலைநாட்டிக் கொண்டிருப்பவர் கருணாநிதி. ஒவ்வொரு தமிழனும் தங்கள் உதடுகளால் மட்டுமல்ல, உள்ளத்தாலும் உச்சரிக்க வேண்டிய பெயர்கள் தான் பெரியார்-அண்ணா-கருணாநிதி.
கேள்வி: அரசியலுக்கு வராவிட்டால் நீங்கள் என்னவாக இருந்திருப்பீர்கள்?
ஸ்டாலின்: நீந்தத் தெரியாவிட்டால் மீன் குஞ்சு என்னவாகியிருக்கும்? தமிழர்களுக்கு சுயமரியாதையையும் பகுத்தறிவையும் ஊட்டிய தலைவர்களின் வரிசையில் தனி இடம்பெற்றுள்ள ஒரு தலைவரின் மகனான நான் அரசியலுக்கு வந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. அரசியலுக்கு வராவிட்டால் என்ற கேள்விக்கு இடமும் இல்லை. அதற்கான பதிலும் இல்லை.
கேள்வி: ஒரு மாபெரும் தலைவரின் மகனாக நீங்கள் பிறந்திருந்தாலும் 30 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வுப் பணிகளின் காரணமாகத்தான் இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் இன்று சிலர் சினிமாவிலிருந்து எளிதாக அரசியலுக்குள் நுழைந்து முதல்வராகிவிடலாம் என்ற கனவில் மிதக்கிறார்களே. இதுபற்றி?
ஸ்டாலின்: சினிமாவில் கனவு காட்சிகள் வரும். அது போன்றவை தான் இதுவும். எந்த துறையில் இருப்பவர்களும் அரசியலுக்கு வருவதற்கு நமது ஜனநாயகம் அனுமதிக்கிறது. ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் சினிமா பாணியிலான வெறும் ஸ்டண்ட்' நடவடிக்கைகளை வைத்து ஏமாற்ற முடியாது. மக்களுக்காக உண்மையிலேயே பாடுபடக்கூடிய கட்சி, அதற்கான உறுதியான கொள்கை, மக்களின் செல்வாக்கு இவையெல்லாம் தான் முக்கியம். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவுடனேயே பஞ்ச் டயலாக்' பேசி முதல்வராகிவிடலாம் என நினைப்பவர்களின் கனவை நான் கலைக்க விரும்பவில்லை. அவர்கள் உறங்கியபடியோ விழித்துக் கொண்டோ பகல் கனவு காணட்டும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications