பாகிஸ்தான் ஜனநாயகம்..சர்தாரி புலம்பல்
இஸ்லாமாபாத்: ஜனநாயகத்தால் மட்டுமே பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என்று அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தானில் தீவிரவாதம் புரையோடிப் போய்க் கிடக்கிறது என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பெனாசிர் பூட்டோவுக்கு ஐ.நா. மனித உரிமை விருது வழங்க்பட்டது. இதைத் தொடர்ந்து சர்தாரி வெளியிட்ட அறிக்கையில், பெனாசிர் பூட்டோவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி எதுவாக இருக்கும் என்றால், தீவிரவாதிகளுடன் சமரசம் கூடாது. அவர்களை நம்மிடமிருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் என்று உறதி எடுத்துக் கொள்வதே.
தீவிரவாதிகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் அரசு உறுதியுடன் உள்ளது. அவர்களது தீய நோக்கத்திலிருந்து பாகிஸ்தானையும், மக்களையும் காப்பாற்ற உறுதியுடன் உள்ளோம்.
பெனாசிரின் கனவுகளை நனவாக்கும் வகையில் ஜனநாயகம் தழைத்தோங்கவும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் பாகிஸ்தான் அரசு பாடுபடும்.
ராணுவ சர்வாதிகாரியின் பிடியில் சிக்கியிருந்த பாகிஸ்தானை மீட்க முடியும், ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பினார் பெனாசிர்.
அவரது அந்தக் கனவில் பாதிதான் நிறைவேறியது. மீதமுள்ள கனவான தீவிரவாதிகளை ஒழிப்பதும், ஜனநாயகத்தை தழைத்தோங்கச் செய்வதையும், நம்பகத்தன்மை வாய்ந்த சமுதாயத்தை ஏற்படுத்துவதையும் நாம் செய்தாக வேண்டும் என்று கூறியுள்ளார் சர்தாரி.
பெனாசிருக்கு அறிவிக்கப்பட்ட இந்த விருதை நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் அவரது மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications