தாக்குதலுக்கான பயிற்சி பெற்றது எப்படி? கஸாப் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: லஷ்கர் இ தொய்பா அமைப்பில் சேர்ந்தது, அங்கு பயிற்சி பெற்றது உள்ளிட்டவற்றை புட்டுப் புட்டு வைத்துள்ளான் மும்பையில் கைதான தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீர் கஸாப்.

இதுகுறித்து மும்பை போலீஸாரிடம் அஜ்மல் கொடுத்துள்ள விரிவான வாக்குமூலம் ...

- நான் நான்காவது வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு படிப்பு ஏறவில்லை. இதனால் திருடனாக மாற முடிவு செய்தேன். அதற்குத் தேவையான துப்பாக்கியை வாங்குவதற்காக ராவல்பிண்டி வந்தேன்.

- ஒரு பக்ரீத் தினத்தின்போது ராவல்பிண்டியில் உள்ள ராஜா பஜாரில் உள்ள லஷ்கர் இ தொய்பா குறித்த ஸ்டாலுக்கு நான் போயிருந்தேன். என்னுடன் இன்னொருவரும் வந்திருந்தார்.

லஷ்கர் இ தொய்பா இயக்கம் குறித்து ஆர்வம் பிறந்தது. இதையடுத்து அதில் சேர முடிவு செய்து விசாரித்தோம். அப்போது லஷ்கர் இ தொய்பா அலுவலக முகவரி கிடைத்தது. அங்கு சென்று அங்கிருந்த ஒருவரை சந்தித்தோம். அவரிடம் லஷ்கரில் சேர விரும்புவதாக கூறினோம். எங்களைப் பற்றி விசாரித்த அவர், பெயர்களைக் குறித்துக் கொண்டார். முகவரியையும் பெற்றுக் கொண்டார். அடுத்த நாள் வந்து பார்க்குமாறு கூறினார்.

- அடுத்த நாள் அங்கு சென்றபோது நேற்று சந்தித்த அதே நபருடன் இன்னொருவரும் இருந்தார். அவர் எங்களிடம் 200 ரூபாய் பணத்தைக் கொடுத்தார். சில ரசீதுகளையும் அளித்தார். பின்னர் முரிட்கே என்ற இடத்தில் உள்ள மர்காஸ் தாயிபா என்ற இடத்திற்குப் போகுமாறு கூறினார். அங்கு லஷ்கர் இ தொய்பாவின் பயிற்சி முகாம் நடப்பதாகவும் தெரிவித்தார்.

- முரிட்கேவில் குறிப்பிட்ட முகவரிக்கு நாங்கள் சென்றோம். அங்கு முகாம் வாசலில் இருந்த நபரிடம் ரசீதுகளைக் காட்டினோம். அவர் எங்களை உள்ளே அனுப்பினார். உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த அலுவலகத்தில் இரண்டு பாரங்களைக் கொடுத்து அதில் எங்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்து கொண்டார்கள். பின்னர் முகாம் நடைபெறும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

- அங்கு தாரா சபா என்கிற 21 நாள் பயிற்சி முகாமுக்கு எங்களைத் தேர்வு செய்தனர். அடுத்த நாள் முதல் பயிற்சி தொடங்கியது.

- அந்தப் பயிற்சியை முடித்ததும், தாரா அமா என்ற பயிற்சிக்கு எங்களைத் தேர்வு செய்தனர். இதுவும் 21 நாள் பயிற்சிதான். பட்டால் கிராமத்தில் உள்ள மன்ஷேரா என்ற இடத்திற்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அங்கு 21 நாட்கள் பயிற்சி நடந்தது. அனைத்து வகையான ஆயுதங்களையும் கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில், உடல் பயிற்சி, ஆயுதங்களைக் கையாளுவது, கையெறி குண்டுகளை கையாளுவது, ராக்கெட் லாஞ்சர்கள், மார்ட்டர்களை கையாளுவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தனர்.

- அந்த முகாமில் மொத்தம் 32 பேர் பயிற்சியில் இருந்தனர். இவர்களில் 16 பேரை ஜாகி உர் ரஹ்மான் என்கிற சாச்சா என்பவரது தலைமையிலான ஒரு முக்கியப் பணிக்கு தேர்வு செய்தனர். அவர்களில் நானும் ஒருவன். பயிற்சியின்போது 3 பேர் தப்பி ஓடி விட்டனர். மீதமிருந்த 13 பேரையும் காபா என்பவருடன் முரிட்கே முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

- முரிட்கேயில், எங்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. மீனவர்கள் கடலில் எத்தகைய சூழ்நிலையை சந்திப்பார்களோ அதுபோன்ற சூழ்நிலையில் எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சோதனை ஓட்டமாக கடலுக்குள் லாஞ்சர்கள் மூலமும் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு பழக்கப்படுத்தப்பட்டோம்.

இந்தப் பயிற்சியின்போது, இந்திய பாதுகாப்புப் படையினர் குறித்து எங்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்த வீடியோ படமும் எங்களுக்குக் காட்டப்பட்டது.

- இந்த முகாம் ஒரு மாதத்திற்கு நடந்தது. இந்தப் பயிற்சியின்போது ரா அமைப்பு உள்ளிட்டவை குறித்தும் விளக்கப்பட்டது.

பாதுகாப்புப் படையினரின் பிடியிலிருந்து தப்புவது குறித்தும் எங்களுக்கு விளக்கப்பட்டது. பயிற்சியின்போது, இந்தியாவை அடைந்ததும், பாகிஸ்தானுக்கு போன் செய்யக் கூடாது எனவும் நாங்கள் எச்சரிக்கப்பட்டோம்.

- நானும், இஸ்மாயிலும் ஒரு அணியாக தேர்வு செய்யப்பட்டோம். எங்களது அணிக்கு வி.எஸ்.டி. அணி என்று பெயரிட்டனர் (அதாவது விக்டோரியா ரயில் நிலையத்தைத் தாக்க நியமிக்கப்பட்டதால் இந்த கோட் வேர்ட்). எங்களுக்கு கூகுள் எர்த் இணையதளம் மூலம் மும்பை மற்றும் அங்குள்ள இடங்கள் குறித்து விளக்கப்பட்டது. விக்டோரியா ரயில் நிலையத்தில் பயணிகள் அலைமோதுவது குறித்த காட்சி எங்களுக்குக் காட்டப்பட்டது.

- பின்னர் நாங்கள் கராச்சியிலிருந்து கிளம்பினோம். 3 நாள் பயணத்திற்குப் பின்னர் மும்பை கரைக்கு அருகே வந்து சேர்ந்தோம். கரைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இஸ்மாயிலும், அபாதுல்லாவும், நாங்கள் வந்த படகில் இருந்தவர்களை கீழே கொண்டு சென்று சுட்டுக் கொன்றனர். பின்னர் நாங்கள் புத்வார் பார்க் என்ற இடத்தை வந்தடைந்தோம்.

- புத்வார் பார்க் வந்து சேர்ந்ததும், நானும் இஸ்மாயிலும் டாக்சியைப் பிடித்து விக்டோரியா ரயில் நிலையத்திற்குப் போனோம். அங்கு சென்றதும் அங்குள்ள பொதுக் கழிப்பறைக்குப் போனோம்.

- அங்கு எங்களது பையில் இருந்த துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகளை எடுத்து வைத்துக் கொண்டோம். பின்னர் துப்பாக்கியை கையில் பிடித்தபடி வெளியே வந்த இருவரும், கண்ணில் பட்டவர்களை சரமாரியாக சுடத் தொடங்கினோம்.

- அப்போது ஒரு போலீஸ்காரர் எங்களை நோக்கி சுட ஆரம்பித்தார். இதையடுத்து நாங்கள் கையெறி குண்டுகளை எடுத்து அவர் மீது வீசினோம். துப்பாக்கியாலும் சுட்டோம்.

- பின்னர் ரயில் நிலையத்திற்குள் சென்ற நாங்கள் அங்கிருந்த பயணிகளை நோக்கி சரமாரியாக சுட்டோம். பிறகு வெளியே வந்து உயரமான கட்டடம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தோம். ஆனால் பொருத்தமான இடம் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அருகில் இருந்த சந்துக்குள் நுழைந்தோம்.

- அங்கிருந்த மருத்துவனைக்குள் புகுந்து அங்கும் சுட்டோம். பிறகு வெளியே வந்த நாங்கள் ஒரு போலீஸ் வாகனம் எங்களைக் கடந்து செல்வதைப் பார்த்து, அருகில் இருந்த புதருக்குள் மறைந்து கொண்டோம். அப்போது இன்னொரு போலீஸ் வாகனம் நாங்கள் இருந்த இடத்திற்கு முன்பாக சற்று தொலைவில் வந்து நின்றது.

- அதில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி எங்களை நோக்கி சுட்டார். அதில் ஒரு குண்டு எனது கையில் பட்டது. இதனால் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கி கீழே விழுந்தது. நான் குணிந்து அதை எடுக்க முயன்றபோது இன்னொரு குண்டு அதே கையில் படவே நான் படுகாயமடைந்தேன். அப்போது சுதாரித்து எழுந்த இஸ்மாயில், போலீஸாரை நோக்கி சுட்டான். அங்கிருந்த 3 பேரும் குண்டு பாய்ந்து விழுந்தனர்.

- இதையடுத்து நாங்கள் அந்த வாகனத்தை நோக்கி போனோம். இஸ்மாயில் சுட்ட 3 பேரும் (ஏடிஎஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட 3 உயர் அதிகாரிகள்தான் அவர்கள்) பிணமாகக் கிடந்தனர். அவர்களை கீழே தள்ளி விட்டு விட்டு வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

- இஸ்மாயில் வண்டியை ஓட்டினான். நான் காயத்துடன் அருகில் இருந்தேன். அப்போது ஒரு இடத்தில் வந்த போது வானம் பஞ்சர் ஆனது.

- வாகனத்திலிருந்து இறங்கிய இஸ்மாயில் வழியில் வந்த காரை துப்பாக்கி முனையில் மடக்கினான். காரில் 3 பெண்கள் இருந்தனர். அவர்களை மிரட்டி கீழே இறங்கச் சொன்ன பின்னர் அதில் நானும், இஸ்மாயிலும் ஏறிக் கொண்டோம்.

- கார் வேகமாகப் போய்க் கொண்டிருந்தபோது கடற்கரையோரம் இருந்த ஒரு சாலையில் போலீஸார் எங்களது காரை மறித்து நிறுத்தினர். இஸ்மாயில் அவர்களை நோக்கி சுட்டான். பதிலுக்கு போலீஸாரும் சுட்டனர். அதில் சில போலீஸார் காயமடைந்தனர். ஆனால் இஸ்மாயில் படுகாயமடைந்தான். எங்களைப் போலீஸார் பிடித்துக் கொண்டனர்.

- மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இஸ்மாயில், பின்னர் இறந்து போய் விட்டான் என்பதை அறிந்து கொண்டேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+