போலியோ சொட்டு மருந்தால் குழந்தைகள் பலி என வதந்தி: பரிதவித்த மக்கள்

நேற்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழகத்திலும் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.
காலை முதல் சிறப்பாக நடந்து வந்த முகாம்களில், மாலைவாக்கில் திடீர் வதந்தி பரவியது. போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகள் சிலர் இறந்ததாக வதந்தி பரவியது.
இதனால் கோவை, ஈரோடு, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்கள் பீதியடைந்தனர். சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர்கள் முகாம்களில் குவிந்தனர். அரசு மருத்துவமனைகளிலும் பலர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான பெற்றோர் இவ்வாறு குவிந்ததால் பரபரப்பு அதிகரித்தது. இருப்பினும் இது வதந்திதான், உண்மையில், எந்தக் குழந்தைக்கும் பாதிப்பில்லை என்று மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த வதந்தி பரவுவதற்கு முக்கிய காரணம், 4 குழந்தைகள் இறந்ததுதான். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், கோட்டு வீராம்பாளையம் கிராமத்தில் அண்ணாதுரை என்பவரது 4 வயது குழந்தை, பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தைச் சேர்ந்த ரவியின் 6 மாதக் குழந்தை, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மோகன் என்பவரின் குழந்தை, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள பாண்டி என்பவரின் 6 மாதக் குழந்தை ஆகியவை இறந்தன.
இந்தக் குழந்தைகள் அனைத்துமே நேற்று சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட சில மணி நேரங்களி்ல் இறந்தன. இவற்றில் சில சளி மற்றும் காய்ச்சல் காரணமாக இறந்துள்ளன. இரண்டு குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கோவையில் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலை, துடியலூர், சூலூர் உள்ளிட்ட பல இடங்களில் சுகாதார மையங்களை மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். திருப்பூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மக்கள் அங்கு தாக்குதலிலும் இறங்கினர்.
சேலத்தில் ஆயிரக்கணக்கானோர் கைக்குழந்தைகளுடன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் அளித்த விளக்கத்தில் அவர்கள் திருப்தி அடையாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. போலீஸார் தலையிட்டு பெற்றோர்களை அமைதிப்படுத்த முயன்றனர்.
அப்போது சிலர் டாக்டர் ஒருவரை அடிக்கப் பாய்ந்தனர். அப்போது மேசை மீது இருந்த சொட்டு மருந்துகள் தூக்கி வீசியடிக்கப்பட்டன. இதையடுத்து டாக்டர்களும், ஊழியர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.
நெல்லையில் ...
நெல்லை மாவட்டத்திலுள்ள கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி பகுதியில் மருந்து அருந்திய குழந்தைகள் பலியானதாக வதந்தி வேகமாக மாலை 4 மணிக்கு பரவியது.
இதனால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை நோக்கி ஆயிரக்கனக்காண பெற்றோர் குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடி குழந்தைகளை பரிசோதித்தனர்.
ஆனால் மருத்துவர்கள் இது வதந்தி என்று விளக்கம் அளித்து பொதுமக்களை அனுப்பினர். செங்கோட்டை, தென்காசி அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள் வராததால் பொதுமக்கள் ஒரு மணி நேரம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை மருததுவமனையில் சில பொதுமக்கள் கேட்டை அடைத்தனர். பல தனியார் மருத்துவமனைகளில் இரக்கமில்லாமல் இதுதான் சமயம் என்று ரூ.50 கட்டணம் வசூலித்தனர்.
இதே நிலைதான் நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காணப்பட்டது.
இ மெயில் மூலம் வதந்தி:
மேட்டுப்பாளையம் மக்களையும் போலியோ சொட்டு மருந்து பீதி பாடாய் படுத்தியது. மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை தூக்கிக் கொண்டு சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர்.
தொலை தூரத்தில் உள்ளவர்கள் டெம்போ வேன் மற்றும் ஆட்டோக்களில் அலறியடித்தபடி வந்தார்கள். மருத்துவமனை வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. குழந்தைகளை எடுத்துக் கொண்டு தாய்மார்கள் அங்கும், இங்கும் அலைந்து தவித்துக் கொண்டு இருந்தனர்.
தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாண்டியன், டி.எஸ்.பி. ராஜன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் இருந்த மைக்கில் டி.எஸ்.பி. ஜெயபாண்டியன் இது பொய்யான தகவல். தவறான வதந்தி. பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. வீண் வதந்தியை நம்ப வேண்டாம் என்று கூறிய பின்னரே அங்கிருந்து சென்றனர்.
பொள்ளாச்சி பகுதியில் வதந்தியை உண்மை என்று நம்பியவர்கள் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் பலரும் ஆவேசம் அடைந்தனர். சிலர் மருத்துவமனை கண்ணாடியை சேதப்படுத்தினர். இதில் சிலர் மருத்துவமனை முன்பு உடுமலை ரோட்டில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இதனால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனே ஆட்டோவில் மைக்' கட்டி வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஒவ்வொரு பகுதியாக சென்று அறிவிப்பு விடுக்கப்பட்டது. பலரையும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எங்கும் கட்டுக்கடங்காத கூட்டமாக காணப்பட்டது.
குன்னூர் காந்திபுரம் பகுதயில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு ஒரு குழந்தை இறந்தததாக வதந்தி பரவியது. குன்னூர் நகரம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு வந்தனர். அங்கிருந்த டாக்டர்கள் குழந்தைகளின் உடல் நிலையை பரிசோதித்தனர்.
இந்த நிலையில் சிலர் போலியோ சொட்டு மருந்து விடவேண்டாம் என்று செல்போன் மற்றும் ஈமெயிலில் தகவல் அனுப்பியுள்ளனர். சொட்டு மருந்து விடப்பட்ட குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாகவும் வதந்தியை பரப்பி னார்கள்.
14 இடங்களில் மறியல் - மருத்துவமனை சூறை
திருப்பூரிலும் சொட்டு மருந்து வதந்தி பொதுமக்களை பாடாய்படுத்தியது. 14 இடங்களில் மறியல் போராட் டம் நடந்தது. ஆத்திரம் அடைந்த சிலர் அரசு மருத்துவமனையின் கண்ணாடி ஜன்னல்களை அடித்து உடைத்தனர்.
தாசில்தார் ஜீப் கவிழ்ப்பு
பொதுமக்களை சமாதானம் செய்ய வந்த மண்டல தாசில்தார் முருகன் ஜீப்பை நடுரோட்டில் கவிழ்த்து விட்டனர். திருப்பூர் நகரமே அல்லோலப்பட்டது. வெகு நேரத்திற்கு பின்னரே சகஜநிலை திரும்பியது.
அவினாசியில் பெற்றோர் களிடையே நேற்று பீதி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெண்கள் தங்கள் குழந்தை களை தூக்கிக் கொண்டு மருத்துவமனைகளுக்கு படை யெடுத்தனர்.
அதனால் அவினாசி, சேவூர், நம்பியாம்பாளையம், துலுக்கமுத்தூர், பெருமா நல்லூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தகவல் அறிந்ததும் பிரேமா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மகாலிங்கம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், நகர செயலாளர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் சென்று குழந்தைகளின் பெற்றோர்களை சமாதானம் செய்தனர்.
போலியோ சொட்டு மருந்து பீதியால் அவினாசி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சரோஜினி, ஜெயராம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சூலூரிலும் அதை சுற்றி யுள்ள பகுதிகளிலும் நேற்று பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. சூலூர் அரசு மருத்துவமனையை 500-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சென்று முற்றுகையிட்டனர். திருச்சி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே சூலூர் பேரூராட்சி தலைவர் எஸ்.எஸ்.பொன்முடி, போலீஸ் அதிகாரிகளும் அங்கு சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இருகூர் அரசு ஆஸ்பத்திரியில் 750-க்கும் மேற்பட்டோர் வேன் மற்றும் ஆட்டோக்களில் குழந்தைகளுடன் வந்து மருத்துவமனையை முற்றுகை யிட்டனர்.
இருகூர் அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் திருச்சி ரோட்டில் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், போலீஸ் உதவி கமிஷனர் கோபால்சாமி, கோவை தெற்கு தாசில்தார் சுப்பிரமணியம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.












Click it and Unblock the Notifications