மலேசியாவில் தவித்த 21 தமிழர்கள் கருணாநிதி முயற்சியால் மீட்பு
சென்னை: வேலைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஏமாற்றப்பட்டு மலேசியாவில் இறக்கிவிடப்பட்டு அங்கு தவித்து வந்த 21 பேர் முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் பத்திரமாக சென்னை திரும்பினர்.
சென்னை மற்றும் கடலூரைச் சேர்ந்த 21 பேரிடம் ஏஜெண்டுகள் ஆஸ்திரேலியாவி்ல் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் வசூலித்தனர். இதையடுத்து மலேசியா வழியாக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி 7 மாதங்களுக்கு முன் விமானம் ஏற்றப்பட்டனர்.
ஆனால், மலேசியாவில் இறக்கி விடப்பட்ட இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. திரும்பி வரவும் பணமில்லாமல் இவர்கள் மலேசியாவில் சிக்கினர்.
ஒரு கோவிலில் தங்கிய இவர்களுக்கு சீனர்கள் சிலர் தான் உணவளித்து வந்தனர்.
இந் நிலையில் கட்டிடத் தொழிலாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா சென்ற தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன். குமார் இவர்களை கடந்த 2ம் தேதி எதேச்சையாக சந்தித்தார்.
அப்போது 21 பேரும் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். இது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு பொன்குமார் தகவல் தந்தார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மூலம் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இந்த விவகாரத்தை முதல்வர் கொண்டு சென்றார்.
இதைத் தொடர்ந்து 21 பேரும் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து 21 பேரும் நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களை பெற்றோரும் உறவினர்களும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
விமான நிலையம் வந்த பொன்குமார், 21 பேரையும் பத்திரமாக மீட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications