திமுக பொருளாளராகிறார் ஸ்டாலின்-10வது முறையாக தலைவராகும் கருணாநிதி

திமுகவின் 13வது பொதுத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. ஒன்றியம், நகரம், பகுதி, மாவட்ட செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநகர மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல்கள் நடத்தப்பட்டு பெரும்பாலான மாவட்டங்களுக்கு செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
இந் நிலையில் வரும் 27ம் தேதி திமுக பொதுக்குழு சென்னையில் கூடுகிறது. இதில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடக்கும்.
இந்தப் பதவிகளில் போட்டியிடுவோருக்கான மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. இந்தப் பதவிகளுக்கு போட்டியிடுவோர் ரூ.4,000 செலுத்தி மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் பதவிக்கு பேராசிரியர் அன்பழகனும் போட்டியிட முன்மொழிந்து அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், பொருளாளர் பதவிக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயரை இப்போதைய பொருளாளர் ஆற்காடு வீராசாமி முன்மொழிந்து மனு தாக்கல் செய்தார்.
வீராசாமியுடன் அமைச்சர்கள் பொன்முடி, வேலு, வட சென்னை, தென் சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினின் பெயரை முன் மொழிந்து வேட்பு மனுக்களை திமுக அமைப்புச் செயலாளர் கல்யாண சுந்தரத்திடம் வழங்கினர்.
மேலும் ஏராளமா திமுக தொண்டர்களும் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகியோரை மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு முன்மொழிந்து மனு தாக்கல் செய்தனர்.
இதன்மூலம் ஸ்டாலின் பொருளாராவது நிச்சயமாகிவிட்டது.
கருணாநிதியின் வழியில்..:
1961ம் ஆண்டில் அறிஞர் அண்ணா திமுக தலைவராக இருந்தபோது கட்சியின் பொருளாளராக கருணாநிதியை நியமித்தார். தேர்தல் நிதி வசூல் உள்பட கட்சியின் பல்வேறு பணிகளுக்கு பெரும் நிதியைத் திரட்டித் தந்து அண்ணாவிடம் பாராட்டைப் பெற்றார் கருணாநிதி.
மாபெரும் அமைப்பாக விளங்கிய காங்கிரசை தேர்தல்களி்ல் எதிர்கொள்ள திமுகவுக்குத் தேவைப்பட்ட நிதியை திரட்டுவதில் பெரும் பங்காற்றினார் கருணாநிதி.
அதன் பி்ன்னரே படிப்படியாக கட்சியின் தலைவர் பதவியைப் பிடித்தார்.
இப்போது கருணாநிதியின் வழியில் ஸ்டாலினும் பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.












Click it and Unblock the Notifications