தைரியம் இருக்கா?-முஷாரப் கொக்கரிப்பு
லாகூர்: பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தை இந்தியா குறைத்து மதிப்பிடக் கூடாது. அது இருக்கும் வரை, பாகிஸ்தானைத் தாக்கும் தைரியம் இந்தியாவுக்குக் கிடையாது என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கொக்கரித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறுத்தி கண்டனம் தெரிவிக்கப்படுவதிலிருந்து தப்பித்து ராஜினாமா செய்து ஒதுங்கிய முஷாரப் தற்போது அமைதியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மஹமூத் கஸூரியின் மகன் கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தான் ஜனநாயக அரசுக்கும், அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானிக்கு எனது முழு ஆதரவுகள் உள்ளன.
பாகிஸ்தான் பாதுகாப்பான கரங்களில் உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் முழு திறனுடன் உள்ளதால் யாரும் நம்மை சீண்டிப் பார்க்கக் கூட முடியாது.
இந்தியாவின் தாக்குதலை முறியடித்து நாட்டைக் காக்கும் திறமை நமது படைகளுக்கு உண்டு. பாகிஸ்தான் ராணுவம் இருக்கும் வரை இந்தியாவால் நம்மை தீண்டும் தைரியம் வராது என்றார் முஷாரப்.


Click it and Unblock the Notifications
