காஷ்மீரில் தேசிய மாநாடு-காங் கூட்டணி ஆட்சி
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸுடன் இணைந்து தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 2வது இடத்தை மக்கள் ஜனநாயகக் கட்சியும், 3வது இடத்தை காங்கிரஸும் பிடித்துள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸுடன் இணைந்து, கூட்டணி ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உமர் அப்துல்லா டெல்லி வந்துள்ளார். இன்று அவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவரும், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத்தும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது உமர் கூறுகையில், எனது திட்டத்தை காங்கிரஸ் தலைமையிடம் விவரித்தேன். அதை அவர்கள் உடனடியாக ஏற்றுக் கொண்டார்கள். ஜம்மு காஷ்மீ்ரில் காங்கிரஸும், தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கவுள்ளன என்றார்.
முன்னதாக நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைவர்களான குலாம் நபி ஆசாத், சைபுதீன் சோஸ் உள்ளிட்டோருடன் சோனியா காந்தி தீவிர ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தி்ல் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான பிருத்விராஜ் சவான், சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து இன்றைய உமர் - சோனியா சந்திப்பு நடந்தது. உமர் அப்துல்லா முதல்வர் பதவியை ஏற்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாம். எனவே உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி அரசு விரைவில் பதவியேற்கவுள்ளது.












Click it and Unblock the Notifications