திருமங்கலம் - இரவில் வெளியூர்க்காரர்கள் தங்க தடை

Subscribe to Oneindia Tamil

Tirumangalam Municipality
மதுரை: திமுக - அதிமுக மோதலைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில், ஜனவரி 7ம் தேதி முதல் மாலை 5 மணிக்கு மேல் வெளியூர்க்காரர்கள் தொகுதியில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் இடைத் தேர்தல் ஜன-9ந்தேதி நடை பெறுகிறது. அதிமுக சார்பில் ம.முத்துராமலிங்கமும், திமுக சார்பில் லதா அதியமானும், தேமுதிக சார்பில் தனபாண்டியன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிடுகின்றனர்.

திமுக, அதிமுகவின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தேமுதிகவினர் அமைதியான முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதிமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரத ராஜன், சிபிஐ சார்பில் தா. பாண்டியன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக்கட்சியினர் தீவிரப் பிரச்சாரம் செய்தனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் தருவதாக கூறி திமுகவினர் பிரச்சினை எழுப்பினர். 14 அதிமுகவினரையும் அவர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து வன்முறை மூண்டது. இரு தரப்பையும் சேர்ந்த ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதனால் தொகுதியில் பதட்டம் நிலவுகிறது. இரு தரப்பும் தத்தமது புகார்களை தேர்தல் பார்வையாளரிடம் அளித்துள்ளன.

இந்த நிலையில், தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிற மாவட்ட போலீஸார் குவிப்பு:

திருமங்கலத்தில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 400 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட காவல்துறையினருடன், நெல்லை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 டிஎஸ்பிகள் தலைமையில் 9 சப் இன்ஸ்பெக்டர்கள், 400 போலீஸார் இடைத்தேர்தல் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 1700 போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொகுதியில் உள்ள 11 காவல் நிலையங்களிலும் ஒரு டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 போலீஸ் நிலையங்களுக்கு ஒரு கூடுதல் டி.எஸ்.பியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் கூடுதலாக 3 போலீஸ் வாகனங்கள் தரப்பட்டுள்ளன.

தொகுதி முழுவதும் ஆங்காங்கா அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிரசாரத்தில் ஈடுபடும் முக்கியப் பிரமுகர்களுக்குத் தனி பாதுகாப்பு அளிக்கப்படும். தொகுதியல் உள்ள திருமண மண்டபங்கள் முழுமையாக சோதனையிடப்படுகின்றன. அங்கு தங்கியுள்ள வெளியூர்க்காரர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கியச் சாலைகளில் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்படும். வெளி மாவட்ட வாகனங்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும்.

தேர்தல் மோதல் தொடர்பாக இதுவரை திமுகவினர் மீது 9 வழக்குகளும், அதிமுகவினர் மீது 8 வழக்குகளும் போடப்பட்டுள்ளன.

தொகுதியில் உள்ள 240 கிராமங்களில் 33 கிராமங்கள் மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அதேபோல பதட்டம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ள 65 பூத்துகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொகுதியில் நேற்று முதல் 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், 7ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளியூர்க்காரர்கள் தொகுதியில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

7ம் தேதியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் டிஜிபி ஆய்வு:

நேற்று கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் திருமங்கலம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்புப் பணிகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதில் தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார், சரக டிஐஜி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எஸ்.பி. மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+