முல்லைத் தீவை தாக்க விரையும் ராணுவம்
கொழும்பு: விடுதலைப் புலிகளின் ராணுவத் தலைமையகம் உள்ள முல்லைத்தீவை பிடிக்கும் நோக்குடன், அங்கு ராணுவம் முன்னேறத் தொடங்கியுள்ளது. ராணுவத்திற்குத் துணையாக விமானப்படையும் குண்டு மழை பொழிந்தபடி சென்று கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி நேற்று ராணுவத்தின் கைக்கு வந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே அங்கிருந்த மக்கள் வட கிழக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகளின் தலைமை அலுவலகமும் இடம் பெயர்ந்து போய் விட்டது.
இந்த நிலையில் அடுத்ததாக ராணுவத் தலைமையகமாக கருதப்படும் முல்லைத்தீவுக்கு ராணுவம் குறி வைத்துள்ளது.
அப்பகுதியைப் பிடிக்கும் நோக்கில் ராணுவம் தற்போது முல்லைத்தீவை நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளது.
அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட முல்லைத்தீவு நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ள ராணுவத்திற்கு உதவியாக விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இன்று காலை முதல் முல்லைத்தீவு நடவடிக்கையை ராணுவம் தொடங்கியுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிடிபட்ட கிளிநொச்சியில் தேடுதல் வேட்டையில் ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளது.
விரைவில் பிடிப்போம்-பொன்சேகா:
இதற்கிடையே விடுதலைப் புலிகளிடமிருந்து முல்லைத்தீவையும் விரைவில் கைப்பற்றுவோம் என இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலேயே ஆனையிறவு உள்ளது. ஐந்து கிலோமீட்டர் தொலைவில் முல்லைத்தீவு உள்ளது. எனவே மிக இலகுவாக கைப்பற்றி விடுவோம்.
புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைவதுதான் அவர்களுக்கு உள்ள ஒரே வழி .
கடந்த இரு மாதங்களில் 1,500 விடுதலைப் புலிகள் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்றார் பொன்சேகா.
விமானத் தாக்குதல்-4 தமிழர்கள் பலி:
இதற்கிடையே முல்லைத்தீவில் அப்பாவி மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் நேற்று விமானப் படையினர் சரமாரியாக குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 தமிழர்கள் பலியானார்கள்.
நேற்று மாலை 4.30 மணியளவில் இலங்கை விமானப்படையின் கேபிர் ரக விமானங்கள் முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் குண்டுகளை வீசி அழித்தன.
பின்னர் மீண்டும் 5 மணிக்கு வந்த விமானங்கள், மக்கள் குடியிருப்புகளின் மீது குண்டுகளை வீசித் தாக்கியது. இதில், பல வீடுகள் இடிந்தன.
முதலில் நடந்த தாக்குதலில், தயாபரன் (25),நிசாந்தரூபன் (34), கஜன் (24), ராம்சீவன் (23) ஆகியோர் உயிரிழந்தனர்.
தனேஸ் (25), மகேஸ்வரன் (45), சிசியந்தன் (24), ஜீவேந்திரன் (26), அன்டன் கமலதாஸ் (30) ஆகியோர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications