கஸாப் பாகிஸ்தானிதான் - ஒப்புக் கொண்டது பாக்.

தேசிய புலனாய்வு அமைப்புகளின் தொடக்க விசாரணைகளில் இது தெரிய வந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகம்மது சாதிக் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கஸாப் பாகிஸ்தான் நாட்டு குடிமகன்தான். இருப்பினும், அவனுக்கும், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் அவர்.
பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மானும், கஸாப் பாகிஸ்தானிதான் என்பதை உறுதி செய்தார்.
கஸாப் பாகிஸ்தானி அல்ல என்று ஆரம்பத்திலிருந்தே பாகிஸ்தான் கூறி வந்தது. அதற்கான ஆதாரங்களை இந்தியா தர வேண்டும் எனவும் கூறிக் கொண்டிருந்தது.
ஆனால் கஸாப் பாகிஸ்தானின் பரீத்கோட் கிராமத்தைச் சேர்ந்தவன்தான் என்பதை பாகிஸ்தான் மீடியாக்கள் தொடர்ந்து நிரூபித்து வந்தன.
இந்தியாவும் கஸாப் குறித்த அனைத்துத் தகவல்கள் மற்றும் மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்த முக்கிய ஆதாரங்களை சமீபத்தில் அளித்தது.
மேலும், டெல்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் மாறியுள்ளது. அங்குள்ள புலனாய்வு மற்றும் உளவு அமைப்புகளுக்கு மும்பைத் தாக்குதலில் தொடர்பு உள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில்தான் கஸாப் பாகிஸ்தானி என்று நேற்று பாகிஸ்தான் திடீரென ஒத்துக் கொண்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டிஸ்மிஸ்:
கஸாப் பாகிஸ்தானிதான் என்பதை ஒத்துக் கொண்ட பாகிஸ்தான் அரசு, அடுத்த சில மணி நேரங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மஹமூத் அலி துரானியை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
கஸாப், பாகிஸ்தானியாக இருக்கலாம் என இவர்தான் முதன் முதலில் சில நாட்களுக்கு முன்பு இந்தியத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துரானியை பிரதமர் கிலானி டிஸ்மிஸ் செய்துள்ளதாக கிலானியின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவகாரங்களில் பிரதமரின் கருத்தை அறியாமல், அவருடன் கலந்து ஆலோசிக்காமல், பொறுப்பற்ற தனமாக துரானி நடந்து கொண்டுள்ளார்.
அஜ்மல் கஸாப் குறித்து ஜியோ டிவிக்கு துரானி அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் (கஸாப் பாகிஸ்தானியாக இருக்கலாம் என்று கூறியது) குறித்து பிரமதருடனோ அல்லது அரசுடனோ துரானி எந்தவித ஆலோசநையும் நடத்தவில்லை.
துரானியின் இந்த பொறுப்பற்ற கருத்துக்களால் நாட்டுக்கு கெட்ட பெயர் வந்து விட்டது. அரசின் கொள்கைக்கு விரோதமானது இது.
இதன் காரணமாக துரானி பதவி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரானியின் பேச்சால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி, வேறு வழியின்றி கஸாப் பாகிஸ்தானிதான் என்பதை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாகவே கஸாப் பாகிஸ்தானிதான் என்பதை அது ஒத்துக் கொண்டுள்ளது. அதேசமயம், இப்படி பேச வேண்டிய நிலைக்குத் தள்ளி விட்ட கோபத்தில் துரானியை டிஸ்மிஸ் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications