கலப்பட பெட்ரோல், கள்ளச் சந்தை பெட்ரோல் விற்பனை அமோகம்
சென்னை: பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு விட்டதால், சென்னை நகரின் பல பகுதிகளில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை சூடு பிடித்துள்ளது. மேலும், கலப்பட பெட்ரோலும் சரமாரியாக விற்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் குமுறலுக்கு ஆளாகியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விற்பனை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஸ்டாக் இல்லை என்று கூறி மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு சில பெட்ரோல் நிலையங்களைச் சேர்ந்தோர் கள்ளச் சந்தையில் அதிக விலை வைத்து பெட்ரோல், டீசல் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
அதேபோல கலப்பட பெட்ரோல் விற்பனையும் படு சூடாக நடந்து வருகிறது.
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்குகள் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளதால், பாதி வழியில் பெட்ரோல், டீசல் தீர்ந்து போன வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல்
இன்று காலை முதல் பெட்ரோல், டீசல் நாடி திறந்திருந்த ஓரிரு பெட்ரோல் பங்குகள் முன்பு பெரும் திரளான மக்களும், வாகனங்களும் திரண்டு விட்டதால், பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகனங்களை எடுக்க முடியாத பலர் இன்று பஸ்களுக்கும், ரயில்களுக்கும் மாறியதால், பஸ்கள், மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் காண முடிந்தது.
ஆட்டோக்களும் கூட பெட்ரோல், டீசல் பற்றாக்குறையால் இன்று கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. காஸ் சிலிண்டரைப் போட்டு ஓட்டும் ஆட்டோக்கள் மட்டும் சற்று சமாளித்தபடி ஓடிக்கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications