சென்செக்ஸ் பெரும் வீழ்ச்சி - சத்யம் பங்குகளின் மதிப்பு உயர்வு
மும்பை: சத்யம் நிறுவனத்திற்கு புதிய இயக்குநர் குழு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் பங்குகளின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இருப்பினும் சத்யம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்றும் சென்செக்ஸுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது.
ராமலிங்க ராஜுவின் மோசடியைத் தொடர்ந்து சத்யம் நிறுவத்தின் பங்கு மதிப்பு சீட்டுக் கட்டை கலைத்தது போல சடசடவென இறங்கி ரூ.6க்கு வந்தன.
இந்த நிலையில் நேற்று சத்யம் நிறுவனத்திற்கு மூன்று புதிய இயக்குநர்களை மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து சத்யம் பங்குகளின் மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் இன்று நல்ல உயர்வைக் கண்டுள்ளது.
இன்றைய பகல் நேர வர்த்தகத்தினபோது சத்யம் பங்குகளின் மதிப்பு 67 சதவீத உயர்வைக் கண்டன. பிற்பகல் நிலவரப்படி ஒரு பங்கின் மதிப்பு ரூ. 40 ஆக உயர்ந்துள்ளது.
இயக்குநர்கள் குழுவை மத்திய அரசு அறிவித்ததே சத்யம் பங்குகளின் உயர்வுக்குக் காரணம் என பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் சத்யத்தின் பிரச்சினை தீரும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் சத்யத்திற்கு உயர்வு காணப்பட்டது. நேற்றைய நிலைய விட இன்று சத்யம் பங்குகளுக்கு நல்ல உயர்வு இருந்தது. இன்றைய பகல் நேர நிலவரப்படி நிப்டியில் அதன் மதிப்பு ரூ. 28.50 ஆக இருந்தது. அது மேலும் உயர்ந்து ரூ. 39.90 ஆக உயர்ந்தது.
இதுகுறித்து சத்யம் நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சத்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது நல்ல வளர்ச்சியைக் காட்டுகிறது. சத்யம் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது
சென்செக்ஸ் வீழ்ச்சி ...
சத்யம் பங்குகளுக்கு உயர்வு காணப்பட்டபோதிலும், சென்செக்ஸ் தொடர்ந்து வீழ்ச்சிமுகமாகவே உள்ளது.
சென்செக்ஸில் இன்று 382 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது. விப்ரோ மற்றும் மெகாசாப்ட் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகள் உலக வங்கி தடை விதித்ததால் இந்த வீழ்ச்சி.
இன்று மாலை 3 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 382.02 குறைந்து, 9,024.45 ஆக இருந்தது.
விப்ரோ பங்குகள் 9.7 சதவீதம் குறைந்தன. அதேபோல இன்போசிஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு 3.3 சதவீதம் குறைந்தது.












Click it and Unblock the Notifications