லண்டனிலிருந்து காங். எம்.எல்.ஏவுக்கு வந்த கொலை மிரட்டல்
சென்னை: ராமநாதபுரம் சட்டசபைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் அசன் அலிக்கு, லண்டனிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அசன் அலியின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் நாகேஸ்வரராவ் தெருவில் உள்ளது. நேற்றிரவு அவர் அவரது செல்போனுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், நீங்களும், உங்கள் ஆட்களும் சேர்ந்து கொண்டு எங்கள் தமிழினத்தை கெடுக்க நினைக்கிறீர்கள். உன்னையும், உன் குடும்பத்தையும் வீதிக்கு கொண்டு வந்து விடுவோம். நீ எங்களை காட்டிக் கொடுக்கிறாய். ராஜபக்சேவுடன் குடும்பம் நடத்திக் கொண்டி ருக்கிறாயா? நீ என்னடா அவருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறாய். கருணாநிதிக்கும் கடிதம் எழுதியிருக்கிறாய்.
அந்த இரண்டு கடிதமும் எங்களிடம் இருக்கிறது. உன் குடும்பத்தை வீதிக்கு கொண்டு வருவது நிச்சயம்.
எங்கள் இனத்தை அழிக்க நினைத்த உனக்கு பல கஷ்டம் காத்திருக்கிறது என்று அந்த நபர் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அசன் அலி, யார் நீங்கள், என்ன தப்பு செய்தேன், என்ன வேண்டும் உங்களுக்கு என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நபர், நான் யார் என்பது முக்கியமல்ல. நீ ஏன் ராஜபக்சேவுக்கும், கருணாநிதிக்கும் கடிதம் எழுதினாய். உன்னை சும்மா விட மாட்டோம் என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டார்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் இந்த தொலைபேசி பேச்சு நடந்துள்ளது. பின்னர் மீண்டும் அசன் அலியே அந்த தொலைபேசி எண்ணை அழைத்துள்ளார். அதே நபரே பேசியுள்ளார். அவரிடம் ஏன் என்னை மிரட்டுகிறீர்கள் என்று அசன் அலி கேட்டுள்ளார். அதற்கு மீண்டும் அந்த நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் விரைந்த அசன் அலி இதுகுறித்து புகார் கொடுத்தார்.
இதையடுத்து சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் தொலைபேசி அழைப்பு லண்டனிலிருந்து வந்தது தெரிய வந்தது.
ஏற்கனவே சென்னை வந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சி்ங் ஆகியோர் கலந்து கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடைபெறும் என லண்டனிலிருந்துதான் மிரட்டல் வந்தது.
தற்போது எம்.எல்.ஏவுக்கும் அதேபோல லண்டனிலிருந்து வந்திருப்பதால் போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மிரட்டல் விடுத்த நபர் விடுதலைப் புலி இயக்க ஆதரவாளராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications