For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருங்காலத்திலும் வெற்றி தொடரும்- ஸ்டாலின்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: திருமங்கலம் தொகுதியில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி, வருங்காலங்களிலும் தொடரும் என்று அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தனது பிளாக்கில் அவர் எழுதியிருப்பதாவது..

தமிழர்களின் நெஞ்சத்தில் பொங்குகின்ற இன்பத்தை இல்லத்தின் அடுப்பில் ஏற்றப்பட்ட புதுப்பானையில் பொங்கச் செய்யும் திருநாள்தான் பொங்கல் திருநாள். இந்த ஆண்டு அந்த இன்பம் இரட்டிப்பாக பொங்குகிறது. அதற்கு காரணம், தமிழகத்தின் முதல்வராய் விளங்குகின்ற கருணாநிதி.

தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்ற சான்றோர் வாக்கினைச் சட்டமாக்கி அதனை நடைமுறைப்படுத்தியிருக்கிறார் கருணாநிதி.

தமிழரின் நெடிய வரலாற்றிற்குரிய காலக்கணக்கு, வேறு பல சூழ்ச்சிகளால் திசைமாறிப்போயிருந்த நிலையில், அதை மீட்டெடுக்கும் முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது திமுக அரசு.

தமிழர்கள் தமது பண்பாட்டு அடையாளத்தை மீட்டிருக்கும் இந்த தமிழ்ப்புத்தாண்டில், அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் சர்க்கரை பொங்கலுக்கான பச்சரிசி, வெல்லம், முந்திரிபருப்பு, ஏலக்காய், உலர் திராட்சை ஆகியவற்றை இலவசமாக வழங்கி தமிழர்களின் இல்லங்கள் தோறும் இனிப்பையும், இனிமையும் பொங்கச் செய்திருக்கிறார். தங்கள் தந்தை தந்த பொங்கல் சீதனமாக, தங்கள் தமையன் தந்த பொங்கல் சீதனமாகக் கருதி அவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

தமிழகத்து தாய்மார்கள் அந்த மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு இல்லத்திலும் இன்பம் பொங்குகின்ற திருநாள் இது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகம் கண்டுள்ள திட்டங்கள் ஏராளம்.

அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவையை உணர்ந்து 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, ஏழை பெண்களுக்கு திருமண உதவி, கர்ப்பிணிகளுக்கு பேறுகால நிதியுதவி, விவசாயக்கடன் ரத்து, வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதத் தொகை, நிலமற்றோருக்கு விவசாய நிலம் என ஒரு தாயின் அக்கறையோடு தமிழக மக்களை கவனித்து வருகிறது.

கருணாநிதி தலைமையிலான அரசு படித்த இளைஞர்கள் வேலை பெறுவதற்கேற்ற வகையில் கணினி தொழில்நுட்ப வளர்ச்சி, சுய உதவிக் குழுக்களுக்கு உதவி, பல நகரங்களிலும் மென்பொருள் பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என சீரான சீறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழகம். அதன் பயனை தமிழகம் உணர்ந்து வருவதால், தங்களுக்கு வாய்த்த நல்லரசுக்கு தமிழக மக்கள் அளித்த நற்சான்றிதழே திருமங்கலம் தொகுதியில் கிடைத்த வெற்றி. இந்த வெற்றி வருங்காலங்களிலும் தொடரும்.

மற்றவர்களெல்லாம் அடுத்த தேர்தலை பற்றி நினைக்கும் போது, முதல்வர் மட்டும் தான் அடுத்த தலைமுறைகளைப் பற்றி சிந்தித்து அதற்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். புதிய தலைமுறையினர் அதனை உணர்ந்து பொதுப்பணியில் தம்மை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களே வியக்கின்ற அளவுக்கு ஆற்றல் பெற்றிருந்த அறிஞர் அண்ணா, தனது அறிவினை இந்த தமிழ் சமுதாயத்தின் உயர்வுக்காக பயன்படுத்தினார். அதற்காக பாடுபட்டார். அவரது நூற்றாண்டில் இன்றைய புதிய தலைமுறை தங்களின் அறிவாற்றலை தமிழகத்தின் உயர்வுக்கு பயன்படுத்த முன்வர வேண்டும்.

பொங்கல் திருநாளில் தாய் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் பெறுகின்ற மகிழ்ச்சியை உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெறவேண்டும் என்பதே நமது லட்சியம். நமது பக்கத்திலே இருக்கின்ற இலங்கையில் வாழும் தமிழர்கள் அமைதியான வாழ்க்கைக்கு திரும்பும் நாளில் நம் நெஞ்சத்தில் பொங்குகின்ற இன்பம் இன்னும் பன்மடங்காகும்.

அன்பு வழியில், அறவழியில் அதற்காக தொடர்ந்து பாடுபடுவோம். உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்குகின்ற முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு துணை நின்று தமிழர்களின் வாழ்வு மலர பணியாற்றுவோம்.

தமிழர்களின் இதயங்களில் இன்பம் பொங்கட்டும். அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு-இன்ப பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

ஆளுக்கு 2 ஓட்டு.. அன்பழகன்:

திருமங்கலத்தில் திமுகவின் வெற்றி குறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளரும் நிதியமைச்சருமான அன்பழகன் கூறுகையில்,

ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவை ஆதரிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவது போல திருமங்கலம் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. இதற்காக பாடுபட்ட மு.க.அழகிரி உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.

குறிப்பாக சொல்லப் போனால், இந்த தேர்தலில் அழகிரியும், ஸ்டாலினும் ஒரே வேனில் ஒன்றாகச் சேர்ந்து பிரசாரம் செய்த அந்தக் காட்சிக்காகவே ஒவ்வொருவரும் 2 ஓட்டுப் போட்டிருப்பார்கள். எனவே, இந்த காட்சிக்கு கிடைத்த வெற்றியைப் பாராட்டுகிறேன்.

இதுபோல வருங்காலத்திலும் இரண்டு பேருமாக சேர்ந்து தமிழ்நாட்டில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X