பொங்கல்: பட்டாசு வெடித்ததில் தகராறு - இரு கோஷ்டிகள் மோதல்
செங்கோட்டை: பொங்கல் திருநாளுக்கு பட்டாசு வெடித்ததில் இருபிரிவினர் மோதல் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை கேசி ரோட்டில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் இளைஞர்கள் சார்பில் முறைப்படி போலீஸ் அனுமதியோடு பொங்கல் திருநாளை முன்னிட்டு விளையாட்டி போட்டிகள் நடத்த தீர்மானித்து இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் குறைந்த அளவே வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் பொங்கல் திருநாள் பட்டாசு வெடித்துள்ளனர்.
அப்போது பட்டாசில் இருந்து வெடித்த துகள்கள் அருகில் இருந்த ராமையா என்பவரது வைக்கோல் படப்பில் பட்டு தீ பிடித்துள்ளது.
இதனை பார்த்த மற்றொரு பிரிவு இளைஞர்கள் 15 பேர் போய் பட்டாசு வெடித்த இளைஞர்களை தாக்கி அவர்களது வீடுகளிலிருந்த சேர்களை உடைத்து தகராறு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லியுள்ளனர்.
விரைந்து வந்த போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக மாரியப்பன், நடராஜன் என்ற இரு இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
இருபிரிவினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று போலீசார் அழைத்து சென்ற 2 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கூறி தாக்குதலில் ஈடுபட்ட பிரிவை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் குவிந்தனர்.
இருபிரிவினரும் சமாதானமாக செல்கிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் போலீசார் சூழ்நிலையை உணர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட மற்ற இளைஞர்கள் வந்த பின்பு பிரச்சனையை தீர்ப்போம் என்று கூறவே, பிரச்சனை மேலும் சூடுபிடித்த நிலையில் அனைத்து பொதுமக்களும் சாலையை நோக்கி திரண்டு வந்தனர்.
பிரச்சனை மோசமாவதை தொடர்ந்து தென்காசி குடிமை பொருள் தாசில்தார் நல்ல மைதீன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அவரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். திட்டமிட்டபடி விளையாட்டு போட்டிகள் நடத்துவோம், பிடித்து சென்ற 2 பேரையும் வழக்கு போடாமல் விடுவிக்க வேண்டும். இரு பிரிவினரும் சாமாதனமாக செல்கிறோம். ஆனால் போலீசார் தான் சம்மதிக்க மறுக்கின்றனர் என்றனர்.
அதனை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இதில் டிஎஸ்பி மயில்வாகணன், தாசில்தார் நல்லமைதீன், இருபிரிவு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பேசியதை தொடர்ந்து பதட்டம் தணிந்தது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மாரியப்பன், நல்லையா, ராஜேந்திரன், வேலு, மாரிச்செல்வம், சுப்பிரமணியன், சுரேஷ் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
