ஈழத் தமிழர்கள் அழிவதைத் தடுத்து காப்பாற்றுங்கள் - பிரதமருக்கு வைகோ கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதிலிருந்து தடுத்து அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில், தாங்க முடியாத மனவேதனையுடன் இந்த கடிதத்தை உங்கள் உடனடிக் கவனத்திற்கும், நடவடிக்கைக்கும் எழுதியுள்ளேன். இலங்கை தீவில் ரத்தவெறி பிடித்த இனவதான இலங்கை அரசு தமிழ் இனத்தையே படுகொலை செய்து பூண்டோடு அழிக்க தன் முப்படைகளையும் ஏவி இன அழிப்பு யுத்தம் நடத்துகிறது.

விடுதலைப்புலிகளுடன் போர் என்ற பெயரால் இந்த இனக்கொலையை நடத்துகிறது.

இன்றைக்கு 6 லட்சம் ஈழத்தமிழர்கள் முல்லைத்தீவில் மரண பள்ளத்தாக்கில் தவிக்கின்றனர். இலங்கை ராணுவம் இடைவிடாத பீரங்கித்தாக்குதலும், விமானகுண்டு வீச்சும் அங்கு நடத்துகிறது.

அப்பாவி தமிழர்கள், பெண்கள், குழந்தைகள், வயதானோர், நோயாளிகள் ராணுவக் குண்டுவீச்சில் மடிகின்றனர். உணவும், மருந்தும் இன்றி சாகின்றனர்.

மிகுந்த வருத்தத்தோடு இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை நான் குற்றஞ்சாட்டுகிறேன். இந்திய அரசு திட்டமிட்டு தொடர்ந்து சிங்கள அரசின் ராணுவ தாக்குதலுக்கு முழு அளவில் உதவி செய்து வருகிறது. இலங்கை விமானப்படைக்கு ராடார்களை தந்தது. இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தது.

இந்திய ராணுவ, விமானப்படை நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பி ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியது.

தமிழ் மக்களை குண்டு வீசிக்கொன்று குவிக்கும் சிங்கள விமானப்படை, விமானங்கள் பயன்படுத்தும் பலாலி விமானதளத்தை இந்திய அரசின் செலவில் பழுது பார்த்து கொடுத்தது. இலங்கைக்கு வட்டியில்லா கடனாக ஆயிரம் கோடி ரூபாயும் கொடுத்தது. அந்தப் பணத்தை கொண்டு இலங்கை, பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க உதவியது.

பசுமை நிறைந்த ஈழத்து வயல்வெளிகளில் தமிழர்களின் ரத்தம் வெள்ளமாக பாய்கிறது.

இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம், செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கலைத்துறையினர், இலக்கியத்துறையினர் ஊர்வலங்கள்,அறப்போராட்டங்கள், மனிதசங்கிலிகள் நடத்தியும் இந்திய அரசு அவற்றை அவமதித்து அலட்சியம் செய்தது. மாறாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இலங்கைக்கு தொடர்ந்து ராணுவரீதியான உதவிகளை செய்து வருகிறது.

உலககெங்கும் உள்ள தமிழர்களின் சார்பில் உங்களை கரம் கூப்பி, மன்றாடி வேண்டுகிறேன். முல்லைதீவில் மரணத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் ஆறு லட்சம் ஈழத்தமிழர்களின் உயிர் காக்க நடவடிக்கை எடுங்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உதவியால் ராஜபக்சே அரசு நடத்தும் தமிழின கொலையை தடுத்து நிறுத்துங்கள். இந்த நியாயமான கோரிக்கையை நீங்கள் நிராகரித்தால் தமிழர்களும், எங்கள் சந்ததிகளும் இந்திய அரசின் இந்த வஞ்சகமான துரோகத்தை எந்நாளும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் வைகோ.

கொடுமையிலும் கொடுமை ...

திருமாவளவன் விடுத்துள்ள இன்னொரு அறிக்கையில்,

ஈழத்தமிழர் இனத்தை அழிவின் விளிம்பிற்கு நெருக்கி தள்ளி, கொலைவெறி தணியாமல் கொடூரத்தின் உச்சத்தில் இருந்து கொக்கரிக்கிறது சிங்கள இனவெறி அரசு.

பல்லாயிரக்கணக்கான சிங்கள இனவெறி படையினரை கொண்டு முல்லைதீவை சுற்றி வளைத்து, உலகத்தின் பிற பகுதிகளோடு எவ்வகையான தொடர்பும் இல்லாத அளவிற்கு துண்டித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் மட்டும் வாழ முடியும் என்கிற அளவிலான நிலப்பரப்பையும், வாழ்வாதாரங்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று சுமார் 5 லட்சம் பேர் வாழ வேண்டுமென்கிற நெருக்கடிக்கு சிங்கள இனவெறி அரசு தள்ளியிருக்கிறது.

தரை வழியாகவும், கடல்வழியாகவும் சுற்றி வளைத்து தாக்குவது மட்டுமல்லாமல் வான்வழியாகவும் தாக்கி வருகிறது. மனிதநேயமற்ற இந்த இனவெறி கொடுமைகளுக்கு பயங்கரவாத எதிர்ப்பு என்கிற அடிப்படையில் சர்வதேச அரசுகள் துணை நிற்பது கொடுமையிலும் கொடுமை.

தமிழகத்திலும், பிற நாடுகளிலும் வாழ்கிற சுமார் 10 கோடி தமிழர்களுக்கும் ஈழத்தமிழினத்தை காப்பாற்ற வலியுறுத்தி மீண்டும், மீண்டும் கெஞ்சி கையேந்தி நிற்கின்ற நிலையிலும் இந்திய அரசு மனம் இரங்கவில்லை என்பது சிங்கள அரசின் கொடுமையை விட பெரிய கொடுமையாக உள்ளது.

பிணக்குவியலுக்கு இடையில் ஒப்பாரியும் ஓலமுமாய் ஈழத் தமிழீழம் அழிந்து கொண்டு வரும் நிலையில், தமிழக தமிழினம் பொங்கல் விழா கொண்டாட்டங்களில் பூரிக்கும் நிலை ஈழத்தமிழினத்தின் நெஞ்சை சுடும் நெருப்பாகவே அமையும். இந்த நிலையில் மாறாத துயரத்தில் அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தை முற்றிலும் தவிர்ப்பது என விடுதலைச்சிறுத்தைகள் முடிவு செய்துள்ளது என்று கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+