தமிழக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் 6 பேர் பலி
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளின்போது காளைகள் குத்தியதில் 6 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 500 பேர் காயமடைந்தனர்.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் களை கட்டியிருந்தன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 50 பேர் காயமடைந்தனர். அவர்களில் நான்கு பேர் மட்டும் படுகாயமடைந்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மணப்பாறையில் 3 பேர் பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
அப்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் (42), பாலகுறிச்சியைச் சேர்ந்த பாலு (28) ஆகியோர் மாடு குத்தி தூக்கிப் போட்டதில் பலியானார்கள். பாலகுறிச்சியைச் சேர்ந்த பெரியய்யா என்ற முதியவர் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
புதுக்கோட்டையில் 2 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சுரேஷ், செல்லையா ஆகியோர் காளைகள் குத்தியதில் உயிரிழந்தனர்.
இந்த சாவுகளோடு ஜல்லிக்கட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 6 ஆக உயர்ந்தது. இதுவரை நடந்த ஜல்லிக்கட்டு சம்பவங்களில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 500 பேராக இருக்கும்.
வழக்கமாக அலங்காநல்லூரில்தான் உயிர்ப்பலி அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பலத்த முன்னேற்பாடுகள், பாதுகாப்புகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருவதால் வெறும் காயத்தோடு நிகழ்ச்சி முடிந்து விடுகிறது.
ஆனால் பிற இடங்களில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படுவதில்லை. பழைய முறையிலேயே மொத்தமாக கூடி காளைகளைப் பிடிக்க முயல்வதால் உயிர்ப்பலி ஏற்படுகிறது. எனவே அலங்காநல்லூர் மாடலில் அனைத்து ஜல்லிக்கட்டுக்களையும் முறைப்படுத்த வேண்டும் என்று மாடுபிடி வீரர்களும், பொதுமக்களும், ஜல்லிக்கட்டை நேசிப்பவர்களும் கோரிக்கை விடுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications