'பூசல்': பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டம் ரத்து
டெல்லி: கட்சிக்குள் நிலவி வரும் கோஷ்டி மோதல் மற்றும் போட்டி காரணமாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் தேர்வுக் கமிட்டிக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பாஜக படு வேகமாக தயாராகி வருகிறது. வேட்பாளர் பட்டியலை அது படிப்படியாக அறிவித்து வருகிறது.
ஒவ்வொரு மாநிலமாக வேட்பாளர் பட்டியலை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அந்தந்த மாநில பொறுப்பாளர்களே தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் வேட்பாளர் தேர்வை முடிக்க பாஜக திட்டமிட்டு இருந்தது.
ஆனால் இன்னும் இப்பணி முடியவில்லை. இதுவரை பாஜக வேட்பாளர்கள் அடங்கிய 4 பட்டியல்களை கட்சி மேலிடம் வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட 4வது பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா உள்பட 18 வேட்பாளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. பீகார் மாநிலம் ஹசாரிபாக் தொகுதி வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதே போல கேரள மாநிலத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் பெயர்களையும் பாஜக அறிவித்துள்ளது.
காசர்கோட்டில் சுரேந்திரன், வடகரையில் கே.பி.ஸ்ரீசன், கோழிக்கோட்டில் முரளீதரன், பொன்னணியில் ஜெயச்சந்திரன் மாஸ்டர், பாலக்காட்டி்ல பத்மநாபன், எர்ணாகுளத்தில் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மீதம் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. சில தொகுதிகளுக்கு கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறதாம். இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் கோஷ்டி மோதலும் வெடித்துள்ளது. இதனால் வேட்பாளரை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, டெல்லியில் இன்றும், நாளையும் பாஜக மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வேட்பாளர் தேர்வில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், இந்த இரண்டு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக தேர்தல் கமிட்டி செயலாளர் அனந்த குமார் கூறுகையில், மாநில பாஜகவிடம் இருந்து வேட்பாளர்களாக சிபாரிசு செய்யப்பட்ட பெயர்கள் அடங்கிய பட்டியல் வந்து சேராததால், தேர்தல் கமிட்டி கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
இருப்பினும், வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெற உள்ள தேர்தல் கமிட்டி கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று பாஜக அறிவித்துள்ளது.
தற்போது கல்யாண் சிங் வேறு பாஜகவிலிருந்து ஜூட் விட்டு விட்டதால் கட்சிக்குள் மேலும் குழப்பம் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications