திமுக ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது - பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து திமுக ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது..
பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், இலங்கையில் தமிழர்களை கொல்லும் அந்தநாட்டு அரசுக்கும் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர். இந்த போர் நிற்காதா? அப்பாவி தமிழர்களுக்கு விடுதலை கிடைக்காதா? என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கிறது.
இது 52 ஆண்டு கால பிரச்சினை. இந்த பிரச்சினையை மத்திய அரசு உடனே தீர்த்து விட முடியும் என்று பேசுவது சரியல்ல. இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு நேரடியாக தலையிட முடியாது. அது வெளிநாட்டு பிரச்சினை என்ற சிக்கல் இருக்கிறது.
தமிழ்நாட்டில் இலங்கை பிரச்சினையை வைத்து சில கட்சிகள் காங்கிரசை பல வீனப்படுத்த முயற்சி செய்து வருகின்றன. திருடியவன் திருடன் திருடன் என்று சொல்லி தப்புவது போல சிலர் எதற்கு எடுத்தாலும் காங்கிரசை குறை சொல்லி வருகிறார்கள்.
விடுதலைப்புலிகள் இலங்கை தமிழர்களுக்கு பாடுபடுவதாக சொல்லிக் கொண்டு முக்கிய தமிழ்த் தலைவர்களை கொன்று குவிந்திருக்கிறார்கள். இலங்கை அரசால் ஏற்பட்ட உயிர் இழப்பை விட விடுதலைப்புலிகளால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் தான் அதிகம். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இதை மறைத்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது சரியல்ல.
அவ்வாறு பேசுபவர்கள் மூலம் காங்கிரசை பல வீனப்படுத்தி இந்த அரசை கலைக்க மறைமுக சதி நடக்கிறது. தி.மு.க. அரசை வீழ்த்த வேண்டும் என்பது தான் அவர்கள் நோக்கம். ஒரு அரசியல் தலைவர் பேசும் போது ஈழத் தமிழர் பிரச்சினைக்காக இந்த ஆட்சி வீழ்ந்தால் 3-வது முறையாக இலங்கை தமிழர்களுக்காக கட்சியை இழந்த பெருமை கிடைக்கும் என்று பேசி இருக்கிறார். காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் இலங்கை பிரச்சினையை தீர்க்க முடியாது.
இன்னும் எத்தனை நாள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் போட்டுக் கொண்டு இருக்க போகி றோம். ஏற்கனவே 2 முறை அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது 3-வது போர் நிறுத்தம்.
நாம் இங்கிருந்து அனுப்பிய பொருட்களை இலங்கை தமிழர்களுக்கு வழங்க விடாமல் விடுதலைப் புலிகள் தடுப்பதாக செஞ்சிலுவை சங்கமே கூறி இருக்கிறது.
காயமடைந்த 70பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் 3 நாட்கள் தடுத்து வைத்திருப்பதாகவும் செஞ்சிலுவை சங்கம் புகார் கூறி இருக்கிறது. இதையெல்லாம் கேட்க கூடாதா? இலங்கை பிரச்சினைக்கு குரல் கொடுக்க வருபவர்கள் அரசியலை கடந்து மனது சுத்தமாக வாருங்கள். காங்கிரஸ் மார்தட்டி தலைமை ஏற்கும்.
திரிகோண மலையில் அமெரிக்கா ஏவுகணை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டதாக இலங்கை அரசு அதிகாரிகளே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இந்திய ராணுவம் நமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை இந்திய ராணுவம் உளவு பார்ப்பதாகவும் வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும் குறை கூறுவது நமது நாட்டின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி விடும்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதற்காக இங்கு பஸ்களை தீயிட்டு கொளுத்தி நமது தமிழர்களை எரிக்க வேண்டுமா? பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக கூறி கொண்டு நமது தமிழர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.
திருமாவளவன் உண்ணா விரதத்தில் பேசும் போது காங்கிரஸ் கட்சியை மிகவும் மோசமாக விமர்சித்திருக்கிறார். இது தேவையற்றது. காங்கிரசை பலவீனப்படுத்தி எதையும் சாதிக்க முடியாது.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் ஒரே தீர்வு. இதை விடுதலைப்புலிகள் ஏற்பார்கள் என்பதற்கு யாராவது உறுதி கொடுக்க தயாராக இருக்கிறார்களா?
மத்திய அரசு என்றால் காங்கிரஸ் தான் என்று சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கோரிக்கையை வைக்கும் கட்சியும் மத்திய அரசில் தான் உள்ளது. அந்த கட்சிக்கும் ஒரு கேபினட் மந்திரியும் ஒரு துணை மந்திரியும் இருக்கிறார். இதையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களே இந்த பிரச்சினையை அரசிடம் நேரில் சொல்லலாம் என்றார் அவர்.
அதிமுக கொறடா செங்கோட்டையன் பேசுகையில், இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் போரால் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் மட்டும் மத்தியில் ஆட்சி செய்யவில்லை. மற்ற கட்சிகளும் சேர்ந்து ஆட்சி செய்துள்ளன.
இந்த சமயத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட சட்டசபையில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இது நாடகமாக நடந்தது கொண்டு இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக போர் நிறுத்தும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பம். முதல்வர் கொண்டு வரும் தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுகிறது.
எனவே அரசியலை மறந்து அனைவரும் ஒட்டு மொத்தமாக குரல் கொடுப்போம் என்றார். பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவைக் கண்டித்து ஜி.கே.மணி கோஷமிட்டார். அதை பாமக உறுப்பினர்கள் திருப்பிக் கூறினர்.












Click it and Unblock the Notifications