யுத்தப் பகுதியிலிருந்து ஈழத்தமிழர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்: ஐ.நா.
கொழும்பு: யுத்தப்பகுதியில் இருக்கும் 2.5 லட்சம் அப்பாவி தமிழர்களை காப்பாற்றும் பணியில் ஐ.நா. சபை ஈடுபட்டுள்ளது.
முல்லைதீவு பகுதியில் இலங்கை ராணுவம் எதிர்பட்ட அனைவர் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. இதையடுத்து தமிழர்கள் அங்கிருந்து சாரைசாரையாக வெளியேறி வருகின்றனர்.
அப்படி வெளியேறுபவர்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் ராணுவத்தாக்குதலுக்கு பலியாகி வருகின்றனர்.
இதையடுத்து யுத்தப்பகுதியில் தமிழர்களை காக்க வேண்டும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை யுத்தப்பகுதியில் இருந்து பத்திரமாக அழைத்து செல்ல ஐ.நா. முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஐ.நா. பொது செயலர் பான் கீ மூனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
யுத்த களத்தில் மரண பயத்தில் சிக்கி தவிக்கும் இரண்டரை லட்சம் தமிழ் மக்களின் உயிரை பாதுகாக்க முயற்சித்து வருகிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
போரில் காயமடைந்த மற்றும் நோயால் அவதிப்படும் மக்களை விரைவாக மீட்பதற்காக சிறப்பு வாகனங்களை அமர்த்த ஐ.நா. திட்டமிட்டு இருக்கிறது. அவர்கள் வவுனியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள். இந்த வாகனங்கள் விரைவில் யுத்த எல்லையை கடக்கும்.
எங்களின் முயற்சிக்கு இலங்கை ராணுவமும் விடுதலைப் புலிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அப்பாவி தமிழர்கள் மற்றும் போர் முனையில் சேவை செய்து வரும் தொண்டு நிறுவன ஊழியர்களின் பாதுகாப்புக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட கூடாது என இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications