For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனப்படுகொலைக்கு எதிராக பிரான்ஸில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் - லண்டனில் நாளை பேரணி

By Sridhar L
Google Oneindia Tamil News

பாரீஸ்: இலங்கை அரசு நிகழ்த்தி வரும் இனப்படுகொலையைக் கண்டித்தும், இலங்கை அரசுக்கு துணை போக வேண்டாம் என்று கோரியும், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரிஸ் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக புதன்கிழமை பிற்பகலில் நடந்த இந்த பிரமாண்டப் போராட்டத்தில், சிறார்கள், முதியவர்கள், பெண்கள் என 10 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

லண்டனில் நாளை கண்டனப் பேரணி

இதேபோல இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையயைக் கண்டித்து நாளை லண்டனில் பிரமாண்டமான கண்டனப் பேரணி நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில்,

சிறிலங்கா அரசாங்கம் நாளும் பொழுதும் வன்னியில் குறுகிய நிலப்பரப்புக்குள் வாழும் மக்கள் மீது கடுமையான வான்வெளி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தி மக்களை வகை தொகையின்றி அழித்து வருகின்றது.

இந்த மனிதப் பேரவலமும் படுகொலையும் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. தினசரி டஜன் கணக்கில் கொல்லப்படுவதுடன் நூற்றுக்கணக்கில் காயமடைந்தும் வருகின்றனர்.

இருக்க இடமின்றி உண்ண உணவின்றி நிம்மதியாக தூங்குவதற்கேனும் இடமின்றி அவர்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குண்டு வீச்சினால் பலியாகுபவர்களைக் கூட குடும்ப உறுப்பினர்கள் அடக்கம் செய்ய முடியாத பரிதாப நிலை உள்ளது.

காயமடைந்தவர்களுக்குக் கூட ஒழுங்கான மருத்துவ வசதியில்லை. இதனால் கடுமையான காயமடைந்தவர்களும் இறக்க நேரிடுகின்றது.

குண்டு வீச்சினால் தறிகெட்டு ஓடுபவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உயிருடன் இருக்கின்றனரா? அல்லது இறந்து விட்டனரா? என்ற நிலை தெரியாமல் தவித்தும் வருகின்றனர்.

மழை போல் பொழியும் குண்டு வீச்சுக்கு மத்தியில் எங்கும் மரண ஓலமே கேட்கின்றது. வீதிகள், வளவுகள் ஏன் வீடுகளுக்குள்ளும் தசைத் துண்டுகளும் பிண்டங்களுமே காணப்படுகின்றன.

இந்த தமிழின அழிப்பையும் மனித அவலத்தையும் அனைத்துலக சமூகம் மௌனமாக இருந்து ஆதரித்து வருகின்றது.

இந்நிலையில் தாயகத்தில் ஏற்பட்டுள்ள அந்த மக்களின் அவலத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் கையிலேயே உள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களை மதித்து ஓரணியில் திரண்டு அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அனைத்துலகத்திற்கு எமது ஒற்றுமையையும் பலத்தையும் காட்டி அனைத்துலகத்தின் கண்களைத் திறக்க வைக்க வேண்டும்.

இது புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் இன்றைய கடமையாகும் என்பதை மறக்க வேண்டாம்.

31 ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ள எதிர்ப்பு ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

"ஓன்று பட்டால் உண்டு வாழ்வு" என்பதைப்போல ஒவ்வொருவரும் தங்களுடைய தேசத்தின் கடமையாக நினைத்து இதில் அணிதிரள வேண்டும். மற்றவர்கள் இதில் கலந்து கொள்ளட்டும் நாம் எமது வேலையைப் பார்ப்போம் என்று வீட்டில் இருந்து விட்டால் நமது ஒற்றுமையை ஏனையவர்கள் எள்ளி நகையாட இடமுண்டு என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

மானமுள்ள வீரமுள்ள தமிழர்கள் என்பதை மாத்திரமல்ல ஒற்றுமையான தமிழர்கள் என்பதையும் நாம் இந்த நாட்டுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

லண்டனில் உள்ள தமிழ் அமைப்புக்கள், பாடசாலைகள்,வர்த்தக நிறுவனத்தினர், பொது மக்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

வர்த்தக நிறுவனத்தினர் தமது வியாபார நிலையங்களை அன்றைய நாள் மூடுவதன் மூலமும் ஏனைய சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்வதுடன் இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி எமது உணர்வை அவலத்திற்கு உள்ளாகியுள்ள தாயக மக்களுக்காக வெளிக்காட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X