கொழும்பில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது
கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை என்ற பெயரில் தமிழர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே இளைஞர்கள். அவர்களை தனி முகாம்களில் கொண்டு போய் அடைத்து சித்திரவதை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 பெண்கள் உட்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார்கள் வந்துள்ளன.
சிவில் உடைகளில் நின்று வீதி ஓரங்களில் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் நடந்து செல்லும் இளைஞர், பெண்களை வழிமறித்து விசாரணை செய்கின்றனர்.
அத்துடன், பேருந்துகளில் பயணிகள் போன்று பயணம் செய்யும் ரகசிய போலீஸார், இளைஞர், பெண்களிடம் அடையாள அட்டைகளை பரிசோதிக்கின்றனர்.
அவ்வாறான விசாரணைகள், சோதனை நடவடிக்கைகளின் போது சிலரை மேல் விசாரணைக்காக அழைத்து செல்வதாகவும் ஆனால் அவர்கள் எங்கு வைக்கப்படுகின்றனர் என்பது குறித்து உறவினர்களுக்கு அறிவிப்பதில்லை என்றும் முறையிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தொழில் நிமித்தம் அல்லது வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளிலிருந்து கொழும்புக்கு வந்தவர்கள் என்று மனித உரிமை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications