கன்னியாகுமரியில் 150 ஆண்டு பழமைவாய்ந்த புனித சேவியர் சிலை உடைப்பு
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் கருக்கல் அருகே உள்ள ஆர்.சி.தேவாலயத்தில் உள்ள 150 ஆண்டு பழமையான புனித சேவியர் சிலை உடைக்கப்பட்டது.
குமரி மாவட்டம் கருக்கல் அருகே ஆர்சி தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தின் முன்புறம் குருசடி ஓன்று உள்ளது. இந்த குருசடி 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். குருசடியின் கீழ்பகுதியில் புனித ஜார்ஜியாரின் சிலையும், மேல்பகுதியில் சேவியர் சிலையும் உள்ளது.
இந்த குருசடியில் பிராத்தனை செய்தால் நோய்கள் குணமாகும் அப்பகுதி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் குருசடியின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சேவியர் சிலையை உடைத்துள்ளனர்.
இன்று காலை ஆலய பணியாளர் ஜான்ஜோசப், குருசடியில் உள்ள சவேரியார் சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடைய சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அப்பகுதி மக்கள் குருசடி முன் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சிலை உடைக்கப்பட்டது குறித்து ஆலய செயலாளர் சேவியர் கருக்கல் போலீசில் புகார் செய்தார். எஸ்பி கபில் குமார், ஏஎஸ்பி அபிஷேக் தீட்சித் மற்றும் கருக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சவேரியர் சிலையை அங்கிருந்து அகற்றிய போலீசார் அதனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து சிலையை உடைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications